அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.30,000 மாதச் சம்பளம்? - அரசாணையை எதிர்பார்த்து காத்திருப்பு

By வி.சீனிவாசன்

வேலூர்: தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் மதுரை, வேலூர் மண்டலத்தில் அதிகமாக தலா 20-க்கும் மேலான அரசு கல்லூரிகள் இயங்குகின்றன. இக்கல்லூரிகளில் காலை, மதியம் என, இரு சுழற்சி முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய உறுப்புக் கல்லூரிகளிலும் படிப்படியாக அரசுக் கல்லூரிகளாக மாற்றப் பட்டுள்ளன. இங்கு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் அரசு கல்லூரிகளில் 2-வது சுழற்சி வகுப்புகளுக்கு நிரந்தர உதவி பேராசிரியர்கள் இன்றி, கவுரவ விரிவுரையாளர்கள் மூலமே பாடமெடுக்கப்படுகிறது. இதன்படி, தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் ஏற்கெனவே ரூ.12,000 மற்றும் 15 ஆயிரம் மாதச் சம்பளமாக வழங்கப்பட்டது. ஒரே கல்லூரியில் யூஜிசி கல்வித் தகுதியில் பணியாற்றும் ரெகுலர் உதவி பேராசிரியர்களுக்கு ரூ.80 ஆயிரத்தை தாண்டியும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் என்ற வேறுபாட்டில் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக மாதம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சுமார் 15 மற்றும் 20 ஆண்டுகளை கடந்து பணியாற்றும் தங்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கவேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இக்கோரிக்கையை பரிசீலித்து, கூடுதல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதன்படி, மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்க இருப்பதாக கவுரவ விரிவுரை யாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், “ரெகுலர் உதவிப் பேராசிரியர்களை போன்று, உரிய கல்வித் தகுதியுடன் ஸ்லெட், நெட் அல்லது பிஎச்டி முடித்தவர்கள் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, கவுரவ விரிவுரையாளர் களின் கல்வித் தகுதியை கல்லூரி கல்வி இயக்குநரகம் உறுதி செய்தது. ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை.

கேரளா போன்ற பிற மாநிலங்களை போன்று யூஜிசி கல்வித் தகுதியில் பணியாற்றும் தங்களுக்கு குறைந்த பட்சம் சம்பளமாக ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும். இருப்பினும், ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கலாம் என அரசு முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகிறது. சமீபத்தில் சில கல்லூரிகளிலுள்ள காலியிடங்களில் கவுரவு விரிவுரையாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இவர்களுக்கும், 15 ஆண்டுக்கு மேலாக பணி அனுபவம் பெற்றவர்களுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமா என, கேள்வி எழுகிறது. இதில் வித்தியாசம் இருக்க வேண்டும்” என்றனர்.

கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஒருவரிடம் கேட்டபோது, ‘அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்க அரசு முயற்சித்துள்ளது. நிதித்துறை ஒப்புதல் கிடைத்தபின், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்