திருச்சி | காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்காலுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்குமா? - விவசாயிகள் வலியுறுத்தல்

By கல்யாணசுந்தரம்

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்கால் பாசனப் பகுதிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி- நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள ஒருவந்தூர் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்கால் மூலம் ஏறத்தாழ 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இவற்றில் பெரும்பாலும் வாழை, கரும்பு சாகுபடி செய்யப்படுவதால், இவற்றுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவை. ஆனால், டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை மூடப்பட்ட பிறகு வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை. இதனால், கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தையே கைவிட்டு விட்டதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காட்டுப்புத்தூர் விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர் கே.வேலுசாமி கூறியது: கடந்த அதிமுக ஆட்சியில் காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்காலுக்கு தண்ணீர்கிடைக்க ஏதுவாக தடுப்பணை கட்டித் தருவதாக உறுதியளித்தனர். ஆனால், அதை செய்யவில்லை.

தற்போது ஒருவந்தூர்- உன்னியூர்இடையே மீண்டும் மணல் குவாரிஅமைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் காவிரியில் அதிக தண்ணீர்வந்தாலும் இந்த வாய்க்காலுக்கு தண்ணீர் கிடைக்காது. இதன் காரணமாக, காட்டுப்புத்தூர் பாசனப் பகுதிகள் தரிசாகவே மாறிவிடும் என்றார்.

தடுப்பணை கட்ட யோசனை: இதுகுறித்து காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்கால் மேம்பாட்டு கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பி.செந்தில்நாயகம் கூறியது:

முன்பு டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும்போது காட்டுப்புத்தூர் வாய்க்காலுக்கு தானாகவே தண்ணீர் ஏறிப் பாயும். தற்போது வாய்க்கால் மேடாகவும், ஆறு பள்ளமாகவும் மாறி விட்டன.

இதனால், ஆற்றில் மணலால்தடுப்பு அமைத்து (கொறம்பு) தண்ணீரை தேக்கி வாய்க்காலுக்கு கொண்டு வர வேண்டியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு அதிகசெலவு ஏற்படுகிறது. மேலும், வெள்ளம் வரும்போது, இந்த தடுப்பு உடைந்து விடும். இதனால் வாய்க்காலுக்கு தண்ணீர் கிடைக்காது.

90 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார்கள் தங்களின் சொந்த செலவில் 12 கி.மீ தொலைவுக்கு இந்த வாய்க்காலை வெட்டிக் கொடுத்தார்கள். காட்டுப்புத்தூர் வாழை உலகப் பிரசித்திப் பெற்றது. இந்த பகுதியில் வேறு பயிர்கள் சாகுபடி செய்யவும் வாய்ப்பில்லை.

தற்போது நெரூர்- உன்னியூர் பாலம் ஏறத்தாழ ரூ.101 கோடி செலவில் கட்டப்படுகிறது. இந்த பாலத்திலயே தடுப்பணை போன்று அமைத்தால் அதிக செலவு ஏற்படாது. பாலமும் வலுவாக இருக்கும். இந்த அணை அமைந்தால் காவிரியில் மாயனூருக்கு முன்பாக ஏறத்தாழ 15 கி.மீ தொலைவுக்கு தண்ணீர் தேங்கும். இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். இந்தப் பகுதியில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு வேறு வழியில்லாத நிலை உள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

பேரவையில் பேசுவேன்: எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன்

முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் கூறியது: காட்டுப்புத்தூர் ராஜ வாய்க்காலுக்கு ஏற்கெனவே ஆண்டுமுழுவதும் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்தது. காவிரியில் 500 கன அடி தண்ணீர் வந்தாலே இந்த வாய்க்காலுக்கு தண்ணீர் தானாக வரும். ஆனால், தற்போது தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்படும் காலங்களிலும் காட்டுப்புத்தூர் வாய்க்காலுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும்.

இதற்கு தற்போது நெரூர்- உன்னியூர் இடையே கட்டப்பட்டு வரும் பாலத்தின் அருகிலேயே, மாயனூரில் உள்ளது போல தடுப்பணை கட்ட வேண்டும். இத்திட்டத்தை நெடுஞ்சாலைத் துறையுடன், நீர்வளத் துறையும் இணைந்து செயல்படுத்த வேண்டும். பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறும்போதே இதை திட்டமிட்டால் குறைந்த நிதியிலேயே நிரந்தர தீர்வு கண்டு விடலாம். இதுதொடர்பாக தமிழக முதல்வரிடம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன்.

தடுப்பணை கட்டும் வரை ஒருவந்தூர் அருகே காவிரி ஆற்றில் நிரந்தர படுக்கை அணையைக் கட்ட வேண்டும். இதன் மூலம் இந்த பகுதியில் விவசாயத்தை நம்பியுள்ள 50 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். இது தொடர்பாக சட்டப் பேரவையிலும் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டுள்ளேன். முதல்வரும், தொடர்புடைய அமைச்சர்களும் உரிய நடவடிக்கை எடுத்து இந்த வாய்க்காலுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தீர்வு காண்பார்கள் என நம்புகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்