ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம், நடைபாதையில் வணிகம் செய்பவர்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வீடுகளில் வேலை செய்பவர்கள் உட்பட 1 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள். மாதம் ரூ.1,000 உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பது, திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ல் முதல்வர் தொடங்கி வைப்பார் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் இத்திட்டத்தை பாராட்டி பேசினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதுதொடர்பாக சில சந்தேகங்கள், கேள்விகளை எழுப்பினர். அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு விளக்கம் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது, குடும்பத் தலைவிகள் உரிமைத் தொகை திட்டத்தை மனம்திறந்து பாராட்டினார். அதேநேரம், இத்தொகை கிடைக்காதவர்களின் நிலை என்ன என்று ஒரு கேள்வி எழுப்பி, அந்த பிரச்சினையையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அவையில் மட்டுமின்றி, பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என வெளியிலும் இதுகுறித்து பல்வேறு விவாதங்கள், விமர்சனங்கள் எழுகின்றன. பலரும் பாராட்டி, பேசி, எழுதி வருகின்றனர்.

இன்றளவும் ஏழை குடும்பங்களை சேர்ந்த பல பெண்கள், கிராம பொருளாதாரத்தை சுமக்கும் முதுகெலும்பாக உள்ளனர். ஒருசில இடங்களில் வேலை, ஊதியம், சமூகப் பொறுப்பில் இடைவெளி, வேறுபாடு இருந்தாலும், ஆணின் உழைப்புக்கு எந்த விதத்திலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும், தாய், சகோதரி, மனைவி என அவரது வீட்டு பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது.

ஒரு ஆணின் வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் காக்கவும், சமூகத்துக்காகவும் வீட்டிலும், வெளியிலும் அத்தகைய பெண்கள் ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் உழைத்திருப்பார்கள். அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டிருந்தால், இந்நேரம் நம் நாட்டில், சட்டம் இயற்றாமலேயே குடும்ப சொத்துகள் அனைத்திலும் பெண்களின் பெயரும் சமமாக இடம்பெற்றிருக்கும்.

இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கவே ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்த சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கும் நிலை விரைவில் உருவாகும் என்று அரசு நம்புகிறது.

எனவேதான், உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் பயன்பெறுவார்கள் என்று பலர் மனக்கணக்கு போடுகின்றனர். இத்திட்டம் 2 நோக்கங்களை கொண்டது.

அதில் முதன்மையானது, பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம். அடுத்தது, ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என்பது, பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு அவர்கள் வாழ உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது. மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

யார் யார் பயன்பெறுவார்கள்?: நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரையும் மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிபுரியும் பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பை தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். சுமார் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1,000 வழங்கும் மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தமிழகத்தின் சமூகநீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்கும். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என
நம்பும் எந்த குடும்பத் தலைவியையும், மனிதநேய அடிப்படையிலான, பெண் உரிமை காக்கக்கூடிய, எனது தலைமையிலான திமுக அரசு கைவிட்டுவிடாது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்