புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து திறந்தவெளியில் பேரணி நடத்த போலீஸார் அனுமதி அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி மற்றும் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், "பாதுகாப்பு காரணங்களுக்காக ஐந்து இடங்களில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி வழங்க முடியும். ஆனால் 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது" என்று அரசின் நிலைப்பாட்டைத் தெரிவித்தனர். அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, "எதற்காக தங்களது பேரணியை அனுமதிக்க மறுக்கிறார்கள்? என்பதே எங்களுக்கு புரியவில்லை" என்று கூறினார்.
அப்போது தமிழக அரசு தரப்பில், "பேரணிக்கு அனுமதி மறுப்பது என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையே தவிர வேறு எதுவும் இல்லை. மேலும், பொது பாதுகாப்புக்கு அச்சம் என அரசு கருதினால், உரிய கட்டுப்பாடுகளை எந்த ஒரு விவகாரத்திலும் விதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில், தமிழ்நாடு அரசின் பதிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அடிப்படை உரிமையை மறுப்பதாக குற்றச்சாட்டப்பட்டது.
» “பாஜகவின் திட்டமிட்ட சூழ்ச்சிதான் ராகுல் காந்தியின் பதவி பறிப்பு” - நாராயணசாமி குற்றச்சாட்டு
அதற்கு தமிழக அரசு தரப்பில், "சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக ஒரே நாளில் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி என்பது வழங்க முடியாது. பேரணியை நாங்கள் தடை செய்யவில்லை ஆனால் பகுதி பகுதியாக நடத்தலாம் எனக் கூறுகிறோம்.முதலில் 5 இடங்களுக்கு அனுமதி வழங்க முடியும், எனவே ஆர்எஸ்எஸ் தரப்பு அதற்கான தேதியை வழங்கட்டும், பின்னர் கூடுதல் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்பது போல எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து இடங்களுக்கும் பொதுவான ஒரு அனுமதியை நிச்சயமாக வழங்க முடியாது. ஒவ்வொரு பகுதியின் நிலைமையும் வெவ்வேறாக இருக்கும். அந்த அடிப்படையில்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.இத்தகைய அதிகாரம் அரசுகளுக்கு இருக்கிறது என, உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருக்கிறது.
உளவுத் துறை என்ன அறிக்கை கொடுக்கிறார்களோ? அதன் அடிப்படையில்தான் எந்த ஒரு முடிவையும் அரசு எடுக்கும்.எனவே இதுபோன்ற மிகமுக்கியமான விஷயங்களை சாதாரணமாக அணுக முடியாது.உளவுத்துறை அறிக்கைகளை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் பேரணிக்கு அனுமதியளித்து இதுபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.பேரணிக்கு முழுமையாக தடையும் விதிக்கவில்லை. அதேநேரம் நினைத்த இடத்தில் பேரணி நடத்தவும் சட்டத்தில் இடமில்லை" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில், "தமிழக அரசு பாதுகாப்பு காரணம் குறித்து கூறுகிறது. குறிப்பாக தடைசெய்யப்பட்ட பிஎஃப்ஐ என்ற ஒரு அமைப்பால் அச்சுறுத்தல் வரலாம் என கூறுகிறது, இதை எவ்வாறு ஏற்க முடியும். தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களால் அச்சுறுத்தல் வருகிறது என்றால் காவல்துறை தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணியை தடை செய்வது என்பது தீர்வல்ல.சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றால் அதனை தடுத்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை.ஆனால் அதைவிடுத்து பேரணிக்கு அனுமதி மறுப்பது என்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
பிஎஃப்ஐ என்ற ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்? மேலும் ஒரு பேரணிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை.பிஎஃப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்ட தேதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு அமைப்பின் முடக்கத்தால், சட்டம் - ஒழுங்கை காரணம்காட்டி தடை விதித்துள்ளனர். பிஎஃப்ஐ அமைப்பால் தாக்குதல்கள் நடத்தப்படும் என அறிக்கை உள்ளதாக கூறுகிறார்கள்.
பிஎஃப்ஐ அமைப்பு தடை செய்யப்பட்ட பிறகு எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லை. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏதோ ஒரு தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தும் என்பதால் எங்களது பேரணியை நடத்த தடை விதிக்க வேண்டுமா? எங்கள் அமைப்பால் தாக்குதல் நடைபெறும் என எந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது எவ்வாறு பேரணியை தடை செய்யலாம்?" என்று கேள்வி எழுப்பி வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தத நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago