“நில ஆக்கிரமிப்பு, எல்என்சிக்கு தாரை வார்ப்பு” - வேளாண் அமைச்சர் மீது அன்புமணி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: “அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, எல்என்சிக்கு தாரை வார்க்கும் பணியில் இறங்கியுள்ளார்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் பாமக நிர்வாகி இல்லத் திருமண விழா இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதையடுத்து, திருப்பத்தூரில் தனியார் ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியது: ''தமிழகத்தில் மிக பெரிய மாவட்டமாக இருந்த வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்க பாமக தொடர்ந்து போராடி வந்தது. அதன் அடிப்படையில், கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் உதயமானது. இதில், பாமகவிற்கு முக்கிய பங்கு உள்ளது.

திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டாலும், இங்கு தொழில் வளர்ச்சி பெறவில்லை. தோல் தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. தொழி்ல் வளர்ச்சி பெற திருப்பத்தூர் மாவட்டத்தில் சிப்காட் அமைக்க வேண்டும். திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பாலாறு - தென்பெண்ணை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு தென்பெண்ணை ஆற்றில் இருந்து 30 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. எனவே, இந்த திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என பாமக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி, பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய வேண்டும். இதுவரை 48 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு காரணம் தமிழக ஆளுநர் தான். இத்தனை உயிர் பறிப்போன பிறகும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய ஆளுநர் தயக்கம் காட்டுவது ஏன் என தெரியவில்லை. தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும்.

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் மது, ஆன்லைன் சூதாட்டம், போதை பொருள் பயன்பாடு என மும்முனை பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க தமிழகத்தில் போதை ஒழிப்பு பிரிவுக்கு தனி டிஜிபி நியமிக்க வேண்டும். அவரது கீழ் 3 ஐஜிக்கள் மற்றும் 17 ஆயிரம் காவலர்கள் நியமிக்க வேண்டும். போதைப் பொருளை ஒழித்தால் தான் அடுத்த தலைமுறையைக் காப்பற்ற முடியும். பெண்களும் போதைப் பொருளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதனால், போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

கடந்த 1988ம் ஆண்டு முதல் என்எல்சியை எதிர்த்து பாமக போராடி வருகிறது. கடலூர் மாவட்டத்தை அழிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. அங்கு நிலத்தடி நீர் அகற்றப்பட்டு, 40 ஆயிரம் ஏக்கர் நிலம் பாலைவனமாக மாறியுள்ளது. இதற்கு அரசும், அமைச்சரும், அந்த மாவட்ட ஆட்சியரும் உடந்தையாக உள்ளனர். வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தின் பணி, விவசாய நிலத்தைக் காப்பது. ஆனால் அவர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, எல்என்சிக்கு தாரை வார்க்கும் பணியில் இறங்கியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு தெரியாதா? இல்லை அமைச்சருக்கு தான் தெரியாதா? மத்திய அரசு கடந்த ஆண்டு, நவம்பர் 21-ம் தேதி இந்தியா முழுவதும் 141 சுரங்கங்களுக்கு ஏலம் நடத்தியது. அந்தப் பட்டியலில் 131வது இடத்தில் சேத்தியாதோப்பு கிழக்கு என்ற பெயரில், கடலூர் மாவட்ட சுரங்கம் பட்டியலில் உள்ளது. அதை யாரும் அன்று தடுக்க வில்லை. இதை தமிழக அரசிடம் கேட்டால், அரசும், அமைச்சரும் தங்களுக்குத் தெரியாது என்கின்றனர். அப்படி என்றால், எதற்கு அரசாங்கம்? அமைச்சர்? ஆட்சியர்?

இதுபோக இந்த விஷயத்தில் அன்புமணி பொய் சொல்கிறார் என்கின்றனர். இது தவிர்த்து என்எல்சி நிர்வாகம், 3வது சுரங்க அமைப்புக்காக நிலம் எடுக்க 3 ஆயிரத்து 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொழில் துறை அமைச்சருக்கு தெரியாதா? புதிய வீராணம் நிலக்கரி திட்டம் தொடங்குவதற்காக, எம்இசிஎல் என்ற நிறுவனத்துக்கு, என்எல்சி நிறுவனம் ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், அப்பகுதியில் 450 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, நிலக்கரி தரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதை அமைச்சரிடம் கேட்டால், நான் பொய் சொல்கிறேன் என்கிறார். அமைச்சர் பன்னீர்செல்வம், தேர்தலுக்காக நான் நாடகம் ஆடுவதாக கூறுகிறார்.

என் மண்ணையும், மக்களையும், விவசாயத்தை காப்பாற்ற நான் எங்கு வேண்டுமானாலும் போவேன், போராட்டம் நடத்துவேன். எனக்கு தேர்தல் முக்கியமில்லை. மக்களும், மண்ணும்தான் முக்கியம். அமைச்சர் பன்னீர்செல்வம் கிளை நுனி அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டிக் கொண்டுள்ளார். அது ஆபத்து என்பது அவருக்கு பின்னால் புரியும். கடலூர் மாவட்டத்தில் புதிய சுரங்கம் எதுவும் அமைக்கப் பட மாடடாது என தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும். என்எல்சி இல்லையென்றல் தமிழகம் இருண்டு விடும் என தொழில் துறை அமைச்சர் கூறியுளளார். தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் நமக்கு 18 ஆயிரம் மெகாவாட் போதும்.

என்எல்சி மூலம் 800 முதல் 1,000 மெகா வாட் மின்சாரம் தான் நமக்கு கிடைக்கிறது. இதற்காக ஒரு மாவட்டத்தை அழிப்பது தான் அரசின் கொள்கையா? விவசாயத்தை யார் அழிக்க முற்பட்டாலும், அதை நான் தடுப்பேன். எல்எல்சியால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் கிடையாது. என்எல்சியின் தரகராக அமைச்சர் பன்னீர்செல்வம் செயல்படுகிறார். 66 ஆண்டுகாலமாக 40 ஆயிரம் ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். விவசாயத்தை காப்பாற்ற நாங்கள் எந்த எல்லைக்கும் போவோம். இது குறித்து நாடாளுமன்றத்தில் நான் கடந்த 2 ஆண்டுகளில் 15 கேள்விகள் கேட்டுள்ளேன். அதில், 10 கேள்விகளுக்கு தான் பதில் கிடைத்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சிங்கூர், நந்திகிராம் அளவுக்கு எங்களை போக வைத்து விடாதீர்கள். அந்தளவுக்கு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ஒட்டு மொத்த மக்களின் மனநிலை என்எல்சி வேண்டாம் என்பதாகும். 300க்கும் அதிகமான கிராம சபைகளில் என்எல்சி வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு மது உற்பத்தியில் இலக்கு நிர்ணயித்துள்ளது. வேளாண்மை வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சுகாதாரம் மேம்பாடு ஆகியவைகளில் இலக்கு நிர்ணயித்தால் பாராட்டலாம்.

ஆனால், மது உற்பத்தியில் இலக்கு நிர்ணயித்துள்ளது தான் திராவிட மாடல் ஆட்சியா? தேர்தலின் போது படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என கூறிய திமுக அரசு தற்போது 2 ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில் இதுவரை எத்தனை மதுக்கடைகளை மூடியுள்ளது என சொல்ல முடியுமா ? வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாமக கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தும். 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான வியூகங்களை நாங்கள் வகுப்போம்'' என்றார். அப்போது, முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜா, நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி, கிருபாகரன், மாவட்டச் செயலாளர் சிவா, மாநில மகளிர் அணித் தலைவி நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்