1 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை... யாருக்கெல்லாம் ரூ.1,000? - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியும் மகளிர் என பல்வேறு வகைகளில் தங்களது விலை மதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்கள் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் பயன்பெறுவர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இத்திட்டம் குறித்து இன்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கத்தில் கூறியது: "சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், தன் தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது? ஒரு ஆணின் வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் காக்கவும் இந்த சமூகத்திற்காகவும் வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்து இருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு இருந்தால், இந்நேரம் நம் நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.

இப்படிக் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அங்கீகரித்தால், ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிடும் என்று நமது அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது.

Universal Basic Income என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சோதனை முறையில், குறிப்பிட்ட சில பகுதிகளில், ஒரு சில சமூகப் பிரிவினரிடம் மட்டும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்படிப் பரிசோதனை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலமாகவே, பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம், வறுமை பாதியாகக் குறைந்திட வாய்ப்பு உண்டு என்றும், கிடைக்கும் நிதியைப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவச்செலவு செய்திடவும் முன்னுரிமை தருகிறார்கள் எனவும், சிறு சிறு தொழில்களைச் செய்ய முன்வருகிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்துக்கும் மேலாக, தன்னம்பிக்கை பெறுள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பரிசோதனை முயற்சியாக உலகில் சில நாடுகளில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன என்றால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போகும் இந்த மாபெரும் முயற்சி, எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப் போகும் பயன்களை, இந்த மாமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

‘இல்லாத ஏழை மக்களுக்கு... - இந்த ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டத்திற்காக, இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையொட்டி, எவ்வளவு பேர் பயன்பெறுவார்கள் என்று பலர் மனக்கணக்குப் போட்டு வருகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். இதுகுறித்து என்னுடைய கருத்தைப் பதிவு செய்வதற்கு முன்னால், ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஊடகம் ஒன்றில், "இந்தத் திட்டத்தின் உதவியைச் செல்வந்தர்களுக்கும், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் கொடுக்கலாமா?" என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ‘இல்லாத ஏழை மக்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும்’ என்று ஒரு பெண்மணி பதில் சொல்கிறார்.

இந்தத் திட்டம் யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்களுக்கே தெரிகிறது. ‘பகிர்தல் அறம்’ என்றும்; ‘பசித்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்றும்; தமிழ் மரபின் தாக்கத்தால் உருவான நலத் திட்டங்களின் நோக்கமும், தேவையானவர்களுக்குத் தேவையான உதவியை, உரிய நேரத்தில் தேடித் தேடி வழங்குவதில்தான் இருக்கும். ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டால், வீடு இல்லாதவர்களுக்கு ஓர் கனவு இல்லம் அமைத்துத் தருவது என்று பொருள். ‘அனைவருக்கும் நிலம்’ என்றொரு திட்டம் என்றால், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்பதுதான் அடிப்படை நோக்கம். ‘முதியோர் ஓய்வூதியம்’ என்றால், ஆதரவற்ற முதியோரின் நலன் காக்க முனையும் திட்டம் என்று பொருள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை என்று பொருள்.

அந்த வகையில், இந்த ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.

யாருக்கெல்லாம் ரூ.1000? - மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

இதனைச் செய்ய முடியுமா? இதற்கு நிதி இருக்குமா என்றெல்லாம், கேள்விகளை எழுப்பி, எங்கே திராவிட முன்னேற்றக் கழக அரசு இதனைச் செய்துவிடுமோ என்ற தங்கள் அச்சத்தை பல்வேறு வகைகளிலே வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு பதிலளிக்கக்கூடிய விதமாக, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதி திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் விளங்கவுள்ள, இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என்பதை இந்த மாமன்றத்தில் மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்குச் சமூக விடுதலை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் என்றால், பொருளாதாரச் சமத்துவத்தை வழங்குவதுதான் திராவிட மாடல் அரசு என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வை சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும், மனிதநேய அடிப்படையிலான பெண் உரிமை காக்கக்கூடிய எனது தலைமையிலான திமுக அரசு கைவிட்டுவிடாது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்