புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீசி உள்துறை அமைச்சரின் உறவினர் கொலை - பாஜகவினர் மறியலால் பதற்றம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும், பாஜக பொறுப்பாளருமான செந்தில்குமரன் நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எழுப்பினார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி, "காவல் துறை கடமையை செய்யும்" என்று உறுதி தந்தார். இச்சூழலில் கொலையான செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடைகள் அடைக்கப்பட்டதால் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி கனுவாப்பேட்டை முதல் வன்னியர் தெருவில் வசித்து வந்தவர் செந்தில்குமரன் (45). உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரான இவர் மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளராக உள்ளார். நேற்று இரவு அவர் மீது வில்லியனூரில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசி, அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்து தப்பியது. அவர் உயிர் இழந்ததை உறுதி செய்த 7 பேர் கொண்ட கும்பல் விழுப்புரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இறந்து கிடந்த செந்தில்குமரனின் உடலை பார்த்து அழுதார். செந்தில்குமரன் உடலை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு விட்டு புறப்பட்டார்.

இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு செந்தில்குமரன் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். இதனிடையே, செந்தில்குமரனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் சம்பவம் நடந்த இடத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஏடிஜிபி ஆனந்த மோகன் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதாக உறுதிதந்தனர். சிசிடிவி ஆதாரங்களும் போலீஸாருக்கு கிடைத்தன.

இந்த நிலையில், இன்று காலை வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில் நான்கு மாத வீதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. இதனால் வில்லியனூர் பகுதியில் பதட்டமான சூழல் நிலை வருவதால் போலீஸார் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுபற்றி கட்சி மற்றும் போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்த வந்த செந்தில் குமரன், அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். செந்தில்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவருக்கு உதவியாக இருந்த பிரபல ரவுடி நித்தியானந்தம் அவரது கூட்டாளிகளோடு சேர்ந்து இந்த கொலை செய்திருப்பதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருக்காஞ்சி என்ற பகுதியில் இட பிரச்சினையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செந்திலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக வில்லியனூர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்திருப்பதாகத் தெரிகிறது. வரும் தேர்தலில் மங்களம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடவும் திட்டமிட்டு பல பணிகளை செய்துவந்துள்ளார். வில்லியனூர் காவல் நிலையத்தில் கொலை உட்பட 3 பிரிவுகளில் நித்தி என்ற நித்தியானந்தம் உள்பட அடையாளம் தெரியாத 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்" என்றனர்.

இந்தக் கொலை வழக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. பூஜ்ஜிய நேரத்தில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசுகையில், "வில்லியனூரில் அமைச்சரின் உறவினரே கொலை செய்யப்பட்டுள்ளது மக்களை அச்சப்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டியது வில்லியனூர் காவல் துறை ஆய்வாளரின் நடவடிக்கையே. சட்டம் – ஒழுங்கு சீர்கெடுவதற்கு அவரே முழு காரணமாக இருக்கிறார் என்று மக்கள் மத்தியில் ஏளனமாக பேசப்படுகிறது.. வில்லியனூரில் எஸ்பி இருந்தும் அவரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் ஆய்வாளரின் அதிகார அத்துமீறல் அதிகரித்துள்ளது.

உளவுத் துறை, எஸ்பி பிரிவு காவலர்கள் சரியான தகவல் கொடுத்தும் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த படுகொலை அரங்கேறி உள்ளதாக பேசப்படுகிறது. அரசு இதுபோன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த கொலையின் பின்னணி குறித்து ஆராய வேண்டும். அதுவரை அந்த ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து, வேறு ஒரு அதிகாரியை நியமித்து, இந்த வழக்கின் உண்மை நிலை வெளியில் வரவேண்டும்" என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, "கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். காவல் துறை கடமையை கண்டிப்பாக செய்யும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்