இந்தியாவில் 4.90 கோடி வழக்குகள் நிலுவை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

By கி.மகாராஜன் 


மதுரை: ‘இந்தியாவில் 4 கோடியே 90 லட்சம் நிலுவை வழக்குகள் உள்ளன. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியது: "தமிழகத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நீதித் துறை கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. நீதித் துறையும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நீதித் துறை கட்டமைப்புகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். மத்திய அரசு நீதித் துறை மேம்பாட்டுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்கிறது. இப்பணத்தை சில மாநிலங்கள் முறையாக செலவு செய்வதில்லை. சில மாநிலங்கள் கூடுதல் நிதி கேட்கின்றன.

மத்திய அரசு ஒதுக்கீடு செய்த பணத்தை செலவு செய்தால்தான் எதிர்காலத்தில் கூடுதல் நிதி ஒதுக்க முடியும். நீதித் துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் இ-கோர்ட் திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் எதிர்காலத்தில் இந்திய நீதிமன்றங்கள் காகிதம் இல்லா நீதிமன்றங்களாக செயல்படும்.

இந்தியாவில் நிலுவை வழக்குகள் பெரிய பிரச்சினையாக உள்ளது. 10 முதல் 15 ஆண்டுகள் கூட வழக்குகள் முடியாமல் உள்ளன. இதற்கு தீர்வு காண வேண்டும். இந்தியாவில் 4 கோடியே 90 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் நீதிபதிகள் சொகுசாக வாழ்கின்றனர். வெளிநாட்டு நீதிபதிகள் தினமும் 4 முதல் 5 வழக்குகளை மட்டுமே விசாரிக்கின்றனர். இந்தியாவில் தினமும் 50 முதல் 60 வழக்குகள் வரை விசாரிக்கின்றனர். நிலுவை வழக்குகளை வைத்து நீதிபதிகளை பற்றி சமூகவலை தளங்களில் விமர்சனம் செய்கின்றனர். இது உண்மையல்ல. நிலுவை வழக்குகள் அதிகமானாலும் புதிதாக 2 மடங்கு அதிகமாக வழக்குகள் தாக்கலாகின்றன. இதனால் இந்தியாவில் நீதித் துறையை பலப்படுத்தவும், சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.

நீதிமன்றங்களில் வழக்காடு மொழி முக்கியமானது. மக்களுக்கான நீதி அவர்கள் மொழியில் இருந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் தமிழில் நடைபெறுகிறது. தொழில்நுட்ப வசதி, மொழிபெயர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் எதிர்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் கூட தமிழில் வாதாடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொதுமக்கள் நீதிமன்றத்தை பயமில்லாமல் அணுக வேண்டும். போலீஸாரும் பொதுமக்கள் மென்மையாக அணுக வேண்டும். கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது. அதே அணுகுமுறையுடன் பொதுமக்கள் நீதிமன்றங்களை நாட வேண்டும். கரோனா காலத்தில் தமிழக நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட்டன.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக கொடூர குற்றங்களில் குற்றவாளிகளை விரைவில் தண்டிக்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் நீதிக்காக நீண்ட நாள் காத்திருப்பதை ஏற்க முடியாது. இதுபோன்ற குற்றங்களில் விரைவில் நீதி வழங்க வேண்டும். நீதிமன்றங்களின் மான்பை வழக்கறிஞர்கள் பாதுகாக்க வேண்டும். நீதிபதிகளும், வழக்கறிர்களும் இணைந்து பணிபுரிய வேண்டும். இந்தியாவில் நீதித் துறையை பலப்படுத்துவது மட்டும் இல்லை. சுதந்தரமாகவும் செயல்பட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE