விவேகானந்தரின் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகளில் பாடங்களாக வைக்க வேண்டும்: பொன்னம்பல அடிகளார் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: ராமகிருஷ்ண மடத்தால் 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கொல்கத்தா ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன், பேலூர் மடத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நூற்றாண்டு நிறைவு விழாவில், குருதேவர்மற்றும் தூய அன்னையின் தீர்த்த யாத்திரைகள், நூற்றாண்டு விஜய பாரம்பரியம், வீரமங்கையரின் வீர வரலாறுகள் உட்பட 5 நூல்களை மத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் வெளியிட்டார். விழாவில் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:

விவேகானந்தர் தாக்கமும், ராமகிருஷ்ண மடத்தின் தாக்கமும் குன்றக்குடி ஆதினத்தோடு பின்னி பிணைந்து இருக்கிறது. ராமகிருஷ்ண விஜயத்தை நூறாண்டுகளுக்கு மேலாக எடுத்து சென்று தமிழ் பணியாற்றி இருக்கிறார்கள்.

இளைய தலைமுறையினர் பலர் குற்ற வழக்குகளில் அதிகளவில் சிக்குகின்றனர். அதனால், பள்ளிகளில் திருக்குறள் மட்டும் அல்ல, விவேகானந்தரின் வழிகாட்டு நெறிமுறைகளையும் பாடங்களாக வைத்தால், தவறு செய்யாத, நேர்மையான, உண்மையான இளைய தலைமுறையினர் உருவாவார்கள். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் விவேகானந்தரின் கருத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE