சென்னை: "பாஜகவின் இந்த நடவடிக்கை ராகுல் காந்தியைப் பார்த்து பிரதமரும் அவரது கூட்டாளிகளும் பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதற்கு முன்பே பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பதன் அடையாளம் தான் இது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை அவசர அவசரமாக பாஜக அரசு பறித்திருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதலாகும். இந்தியாவில் தேர்தல் ஜனநாயகத்தையே முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கான ஒத்திகையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்த எதேச்சதிகாரப் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்களவைத் தலைவர் இந்த தகுதி நீக்க ஆணையைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
நம் நாட்டில் பொருளாதார மோசடிகளைச் செய்துவிட்டு பாஜக ஆதரவுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியோடிப் பதுங்கியிருக்கும் சில குற்றவாளிகளைப் பற்றி 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பரப்புரையின் போது, கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியிலே அவர் பேசினார். அதனை ஒரு சாதிப்பிரச்சனையாகத் திசை திருப்பி குஜராத் மாநிலத்தில் ஒருவர் தொடுத்த கிரிமினல் அவமதிப்பு வழக்கில் இரண்டாண்டுகள் தண்டனை வழங்க வைத்து, அதன்மூலம் அவரது பதவியைப் பறித்து இருக்கிறார்கள். இது மிகவும் அற்பமான அரசியல் ஆகும்.
இந்திய நாட்டுக்குத் துரோகம் செய்த பொருளாதார மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவாக நீதித்துறையைப் பயன்படுத்தி தமது அரசியல் எதிரியைப் பழிவாங்கியிருக்கிறது பாஜக அரசு. சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என அப்பாவிப் பொதுமக்களை நம்பவைக்கும் வகையில் திட்டமிட்டு இந்த ஜனநாயகப் படுகொலையை பாஜக அரசு அரங்கேற்றியிருக்கிறது.
சூரத் என்னுமிடத்தில் கீழமை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்தே விசாரித்த நீதிபதி தங்களின் விருப்பத்திற்கு இணங்காதவர் என்பதை அறிந்து அவரை மாற்றிவிட்டு தமக்குத் தோதான ஒருவரை அமர்த்தி இந்தத் தீர்ப்பை வாங்கியிருக்கிறார்கள். தீர்ப்பளித்த நீதிபதி தண்டனையை 30 நாட்களுக்கு ஒத்திவைத்து மேல்முறையீடு செய்யலாம் என்று கால அவகாசம் வழங்கியிருக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் ஒரே நாளிலேயே ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறித்திருப்பது அவர் நாடாளுமன்றத்துக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்ற பாஜகவின் தரம் தாழ்ந்த சூதுமதியையே காட்டுகிறது.
» சந்தா செலுத்தாத கணக்குகளின் ப்ளூ டிக்கை நீக்க ட்விட்டர் முடிவு? - ஏப்ரல் முதல் நடவடிக்கை
அதானியின் பங்குசந்தை மோசடி விவகாரத்தில் ராகுல் காந்தி எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் பிரதமரால் பதில் சொல்ல முடியவில்லை. இந்திய வரலாற்றில் நடந்த மாபெரும் ஊழலாக அதானியின் பங்குச் சந்தை ஊழல் விளங்குகிறது. அதுகுறித்து ராகுல் காந்தி பேசியதில் அதானி பற்றி குறிப்பிட்டவற்றையெல்லாம் அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள். இப்பொழுது அவரையே அவையிலிருந்து நீக்கி இருக்கிறார்கள்.பிரதமர் மோடி தனது நண்பர் அதானியை ராகுல்காந்தி அம்பலப்படுத்தியதைப் பொறுத்தக் கொள்ள இயலாமல் அவசரம் அவசரமாக இவ்வாறு நடவடிக்கை எடுத்து தனது பழிவாங்கும் வெறியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேலோ தண்டனை பெற்றால் ஒருவரது பதவி பறிக்கப்படலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீட்டில் தடை விதிக்கப்பட்டால் அவர் பதவியில் தொடர்வதற்கு எந்த விதத் தடையும் கிடையாது. எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒரு வழக்கில் சட்டத்துக்கு முரணாக அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீட்டில் நிச்சயம் தடை விதிக்கப்படும். இதை அறிந்து கொண்டு தான் அவசர அவசரமாக அவரது பதவியை பறித்திருக்கிறார்கள்.
பாஜகவின் இந்த நடவடிக்கை ராகுல் காந்தியைப் பார்த்து பிரதமரும் அவரது கூட்டாளிகளும் பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. தேர்தலுக்கு ஓராண்டு இருப்பதற்கு முன்பே பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பதன் அடையாளம் தான் இது.இந்தியாவில் தேர்தல் ஜனநாயக முறையை ஒழித்துக் கட்டி இதை ஒரு சனாதன சர்வாதிகார நாடாக மாற்ற வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பலின் திட்டம். அதற்கான ஒத்திகையே இது .
இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டிப்பதிலும் சனாதனவாதிகளை ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதிலும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் உறுதியோடு திரள வேண்டும் .சர்வாதிகாரம் வென்றதில்லை, சனநாயகம் தோற்றதில்லை" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago