உள்துறை அமைச்சக அனுமதிக்குப் பின் புதுச்சேரி மாநில தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “உள்துறை அமைச்சக அனுமதி கிடைத்தவுடன் மாநில தேர்வாணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு நிச்சயம் தரும்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

அனிபால் கென்னடி (திமுக): "மாநில தேர்வாணையம் குறித்து அரசின் நடவடிக்கை என்ன? மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதா?”

முதல்வர் ரங்கசாமி: "புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் இந்திய அரசியல் சாசனப்படி தனியாக தேர்வாணையம் அமைக்க இயலாது. புதுச்சேரியை பொறுத்தவரை ஏ, பி பிரிவு அரசிதழ் பதிவு பெற்ற பதவிகளில் நேரடி நியமனம் அனைத்தும் மத்திய தேர்வாணையம் மூலமே நடைபெறும். அரசிதழ் பதிவு பெறாத பி மற்றும் சி பிரிவு ஊழியர்களை தேர்வு செய்ய தேர்வு வாரியம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி விபரங்களையும் கேட்டுள்ளது. 13.3.2007-ல் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்படுகிறது. உள்துறை அமைச்சகம் கூடுதல் அந்த விபரங்களும் விரைவில் அனுப்பப்படும். உள்துறை அமைச்சக அனுமதி கிடைத்தவுடன் தேர்வு வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்." .

அனிபால் கென்னடி: "குரூப் ஏ, பி பதவிகளில் 135 அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். இதில் 5 பேர் மட்டும்தான் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். ஏற்கெனவே மத்திய அரசு வழங்கும் நிதி படிப்படியாக குறைந்துவிட்டது. நாம் வருவாயை அதிகரித்துள்ளதாக கூறுகிறீர்கள். கோவா உட்பட பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நமக்கு மாநில அந்தஸ்து பெற தகுதியில்லையா? மத்தியில் கூட்டணி ஆட்சி உள்ளதால் மாநில அந்தஸ்தை கேட்டுப்பெற வேண்டும்."

முதல்வர் ரங்கசாமி: "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு நிச்சயம் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அந்தஸ்தை பெறுவோம்."

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE