“தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது” - ‘கிளி கூண்டு’ உதாரணத்துடன் அண்ணாமலை பேச்சு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: "தமிழகத்திலும் களம் மாறிவிட்டது. அது ரோட்டில் நடந்து செல்லும் சாமானிய மனிதனின் கண்களில் அந்த நம்பிக்கை தெரிகிறது. பெண்கள் உட்பட யாரைப் பார்த்தாலும் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக தமிழகத்திலும் களம் மாறி அந்த நம்பிக்கை இங்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: "மணிப்பூரில் கதை மாறிவிட்டது. திரிபுராவில் 2015-ல் பாஜகவின் வாக்கு சதவீதம் 2 சதவீதமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு அங்கு 53 சதவீத வாக்கு பாஜகவின் பக்கம் இருக்கிறது. இப்படி எல்லாமே மாறிவிட்டது. 26 சதவீதம் கிறிஸ்தவர்கள் இருக்கக்கூடிய கோவாவிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. 36 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் எந்தவொரு கட்சியும் ஆட்சியை தக்கவைக்கவில்லை. யோகி ஆதித்யநாத் ஆட்சியை தக்க வைத்திருக்கிறார், அங்கேயும் களம் மாறிவிட்டது. எல்லா இடத்திலேயும் களம் மாறிவிட்டது.

இதை சில நேரங்களில் கூண்டுக்குள் இருக்கிற கிளியைப் போல பார்க்கக் கூடாது. ஒரு கிளி 30 ஆண்டுகளாக கூண்டிற்குள்ளேயே இருக்குமா? அந்தக் கிளியை திறந்துவிட்டு, பாஜக வந்துவிட்டது, வளர்ந்துவிட்டது என்று கூறினால், அந்தக் கிளி யோசிக்கும். 30 ஆண்டுகளாக இந்த கூண்டிற்குள்தான் நான் இருக்கேன். திடீரென வந்து கூண்டை திறந்துவிட்டு என்னை பறந்துபோகச் சொன்னால், நான் என்ன செய்வேன் என்று அந்தக் கிளி கேட்கும். இதுபோலத்தான் இப்போது தமிழகத்தில் ஆக்ரோஷமாக சில உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கிளியால் பறக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அந்தக் கூண்டு இப்போது திறக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். அந்தக் கிளியும் பறக்கத் தயாராக இருக்கும் என்று நம்புகிறேன். எல்லா இடத்திலும் களம் மாறிவிட்டது என்பதை நாம் உணர்ந்துவிட்டோம்.

தமிழகத்திலும் களம் மாறிவிட்டது. அது ரோட்டில் நடந்துசெல்லும் சாமானிய மனிதனின் கண்களில் அந்த நம்பிக்கை தெரிகிறது. பெண்கள் உட்பட யாரைப் பார்த்தாலும் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாக தமிழகத்திலும் களம் மாறி அந்த நம்பிக்கை இங்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசியல் புரட்சிக்கான நேரத்திற்கு தயாராகிவிட்டோம். தமிழகத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கக்கூடிய அரசியல் இப்படியே தொடர்ந்தால், தமிழகம் பின்னோக்கிச் செல்லும். பாஜக கூனிக் குறுகி ஓட்டுக் கேட்கப் போவதில்லை. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஓட்டு கேட்கப்போகிறோம். காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு உதவித் தொகையை அதிகப்படுத்தியிருக்கிறோம். அனைவருக்கும் அத்தனை நலத்திட்டங்களை பாஜக ஆட்சி செய்துள்ளது" என்று அண்ணாமலை பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE