சென்னை | 3 நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க அனுமதி: 2 ஆண்டுகள் செயல்பட தனியாருக்கு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி ஆகிய 3 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க தனியாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டி உணவகம் 2 ஆண்டுகள் செயல்பட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமல், வருவாய் ஈட்ட ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்துவருகிறது. இதற்காக, தனியாருடன் இணைந்து சரக்கு ரயில் சேவையை அதிகரிப்பது, ரயில்வேயில் உள்ள காலி இடங்களை வணிக நோக்கில் வாடகைக்கு விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக, கட்டணமில்லா வருவாய் ஈட்டப்படுகிறது.

அந்த வகையில், காலி ரயில் பெட்டிகளை உணவகமாக மாற்றி, ரயில் நிலையத்தில் உணவகம் நடத்த தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி ஆகிய 3 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைப்பது தொடர்பாக மின்னணு ஏலம் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், 2 ஆண்டுகள் ஒப்பந்தம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி ஆகிய 3 ரயில் நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் வரும் ஜூன் 6-ம்தேதி முதல், 2025-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி வரை 2 ஆண்டுகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரீமியம் வாகன நிறுத்துமிடத்தில் ரயில் பெட்டி உணவகம் செயல்படும். ஆண்டுக்கு ரூ.95 லட்சம் வீதம் இரண்டு ஆண்டுக்கு. ரூ.1 கோடியே 90 லட்சம் உரிமக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் ரயில் நிலையத்தில், சென்ட்ரல் நிலையம் செல்லும் பாதை முடிவில், தென் பக்கத்தில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. உணவகம் நடத்த உரிமக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.21 லட்சம் வீதம், 2 ஆண்டுக்கு ரூ.42 லட்சம்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பொத்தேரி ரயில் நிலையத்தில் இந்த உணவகம் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. உரிமக் கட்டணமாக, இரண்டு ஆண்டுக்கு ரூ.16.20 லட்சம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வேகோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில், ரயில் பெட்டி உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மின்னணு ஏலம் முடிந்து, 3 நிலையங்களில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கத் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தனியாருக்கு காலியான ரயில் பெட்டி கொடுக்கப்படும். இந்தப் பெட்டியை அவரது விருப்படி வடிவமைத்துக் கொள்ளலாம். இந்தப் பெட்டியின் உள்பக்கத்தில் உணவுகள் தயாரிக்க அனுமதிக்கப்படும். இந்த உணவகம் 24 மணி நேரமும் செயல்படலாம். இவ்வாறு சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE