மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவதால் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் தவிர மீதமுள்ள 31 மாவட்டங்களில் நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரையிலும் இயங்கி வருகிறது.
காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்படுவோர் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு மற்றும் நிவாரணம் பெறலாம். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான இந்த நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்டோர் நேரடியாக மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறவும் வழிவகை உள்ளது.
இதில், நிவாரணம் கோரும் தொகை ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம். நிவாரணத் தொகை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ள வழக்குகள் மற்றும் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்குகள், மாநில நுகர்வோர் ஆணையத்தால் விசாரிக்கப்படும்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நுகர்வோரின் புகார் மனு அல்லது மேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வேண்டும்.
விழிப்புணர்வு அதிகரிப்பு
நுகர்வோரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விழிப்புணர்வு காரணமாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் கடந்த 2015 ஜனவரியில் நிலுவையில் இருந்த மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 7,792 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கையானது 2017 ஜூன் மாதத்தில் 9,082-ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை (தெற்கு) நுகர்வோர் நீதிமன்றத்தில் 2,230 வழக்குகளும், மதுரையில் 1,023 வழக்குகளும், கோவையில் 978 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் தொடங்கிய காலம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை தாக்கல் செய்யப்பட்ட 1,16,173 வழக்குகளில், 1,07,091 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் 1,072 (1 சதவீதம்) மட்டுமே 90 நாட்களுக்குள் முடித்துவைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த ஜூன் வரை தாக்கல் செய்யப்பட்ட 28,214 வழக்குகளில், 24,616 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் 287 வழக்குகள் (1 சதவீதம்) மட்டுமே 90 நாட்களுக்குள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் முடித்துவைக்கப்பட்டாலும், ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு கிடைக்கும் நிவாரணத்தால் நுகர்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வழக்கை இழுத்தடித்தால் அபராதம்
இதுதொடர்பாக நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் பிறவி பெருமாள் கூறுகையில், “நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின்படி மாவட்ட நீதிமன்றங்கள் உரிய காரணங்கள் இல்லாமல் வழக்கை ஒத்திவைக்கக்கூடாது. ஒருவேளை எதிர்மனுதாரர் அல்லது மனுதாரர் தரப்பு வழக்கை ஒத்திவைக்க கோரினால் வழக்கை தாமதமாவதுவதற்காக ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ரூ.500 வரை நீதிமன்றங்கள் அபராதம் விதிக்க முடியும். ஆனால், பெரும்பாலும் நுகர்வோர் நீதிமன்றங்கள் அதை செய்வதில்லை. அப்படி, ஒவ்வொரு முறையும் அபராதம் விதித்தாலே தேவையில்லாமல் வழக்குகள் இழுத்தடிக்கப்படுவது குறையும்.
அதேபோல, விதிகளின்படி நுகர்வோர் நீதிமன்றங்கள் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் வழக்குகளை விசாரிக்க வேண்டும். ஆனால், பல நுகர்வோர் நீதிமன்றங்களில் மதியம் வழக்குகள் விசாரணை நடைபெறுவதில்லை. எனவே, முழு நேரம் வழக்குகளை விசாரிப்பதோடு, காலிப்பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்பினால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவதோடு, நுகர்வோருக்கு உரிய காலத்தில் நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago