தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம், வாட்ஸ் அப் மூலம் விவசாயிகளுக்கு சேவை வழங்க 9 திட்டங்கள் - முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: தகவல் தொழில்நுட்பம், வாட்ஸ்அப் மூலம் விவசாயிகளுக்கு சேவை வழங்கும் 9 வகையான திட்டங்கள் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வேளாண் பட்ஜெட் 2023-24-ஐ அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:

மின்னணு வேளாண்மைத் திட்டம்: நவீன மின்னணு தொழில்நுட்பங்களை வேளாண்மையிலும் உட்புகுத்தி, விவசாயிகள் எளிய முறையில் துரிதமாகக் கையாண்டு பயன்பெற ஏதுவாக, கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, 37 வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் இடுபொருட்கள் பெறுவதற்கு வசதியாக சோதனை முறையில் பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் பணமில்லா பரிவர்த்தனை விரிவுபடுத்தப்படும்.

வேளாண் மின்னணு உதவி மையம்: தமிழகத்தில் வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் 880 வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் திட்டப் பலன்கள் சேரும் வகையில், வேளாண்மை–உழவர் நலத்துறையின்மூலம் வழங்கப்படும் அனைத்துப் பயன்களும் பெற விவசாயிகள் மின்னணு முறையில் விண்ணப்பிக்கத் தேவையுள்ளது. இதன்பொருட்டு, விவசாயி சார்ந்த அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மின்னணு முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள உதவும் வகையில், 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மையங்கள் (இ-சேவை) இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

தகவல் பரிமாற்றக்குழு: விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்புகள், மானியங்கள், பூச்சி-நோய் தாக்குதல் போன்ற தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வட்டார அளவில் விவசாயிகளைக் கொண்டு ”வாட்ஸ்அப்” குழு உருவாக்கப்படும். இக்குழுவில் அனைத்து குக்கிராமங்களிலிருந்தும், விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக வட்டார வேளாண்மை உதவி இயக்குநரும், தோட்டக்கலை உதவி இயக்குநரும் செயல்படுவார்கள்.

வட்டார குழுக்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் குழுக்கள் உருவாக்கப்படும். துறையின் மாநில அளவில் செயலாற்றும் விளம்பரப் பிரிவு, மாவட்டத்திற்குரிய தகவல்களை, குறுஞ்செய்தி (SMS), குரல் வழிச் செய்தி (Voice Message), குரல் வழி அறிவிப்பு (Voice Blasting), மின்னணு விளம்பரம் (Digital Advertisement) வாயிலாக மாவட்டக் குழுவிற்கு அனுப்பி வைக்கும். இத்தகவல்கள் உடனடியாக வட்டார அளவில் உள்ள விவசாயிகள் குழுவிற்கு அனுப்பப்பட்டு, அவர்கள் தங்களது குக்கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்குத் தகவல்களைத் தெரிவிப்பார்கள்.

GRAINS-ஒரு தளம்-பல பயன்கள்: உழவர் நலன் சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டப்பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு சென்று, பல்வேறு ஆவணங்களை தனித்தனி படிவங்களில் தரவேண்டியுள்ளது. இத்தகைய நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர், சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களான வங்கிக் கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து, கணினிமயமாக்கி புதிய இணையதளமான ‘GRAINS’ (Grower Online Registration of Agriculture Inputs System) அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் (One Stop Solution) கிடைக்கும்.

இதன் மூலம், பயிர்க்கடன், நெல். கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கைப் பேரிடர் நிவாரணம், நலத்திட்ட உதவிகள், வேளாண்மை சார்ந்த 13 க்கும் மேற்பட்ட துறைகளின் பல்வேறு திட்டப் பலன்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இது விவசாயிகளுக்கும் அரசின் பல துறைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

இ-வாடகை செயலி: விவசாயிகள் உழவுப் பணியினைத் தங்குதடையின்றி மேற்கொள்ள உதவிடும்பொருட்டு, தனியாருக்குச் சொந்தமான டிராக்டர்களின் உரிமையாளர்கள், வேளாண் இயந்திரங்கள், பம்புசெட்டுகளின் பழுதுகளை சரிசெய்யக்கூடிய தனியார் பழுதுநீக்குபவர்களின் பெயர், விலாசம், கைப்பேசி எண் போன்ற விவரங்கள் வட்டார, மாவட்ட வாரியாக, இ-வாடகை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உழவன் செயலியோடும் இணைக்கப்படும்.

மின்னணு தேசிய வேளாண் சந்தை விரிவுபடுத்துதல்: தமிழ்நாட்டில் உள்ள 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 127 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) இணைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் விளைபொருளின் தரமறிந்து மறைமுக ஏலத்தில் அதிக அளவில் வணிகர்கள் பங்கு கொள்வதால் இலாபகரமான விலை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, ஆறு இலட்சம் விவசாயிகள் இத்தளத்தின் மூலம் 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான 10 இலட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்களை பரிவர்த்தனை செய்துள்ளனர். வரும் ஆண்டில், மேலும்
30 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்துடன் இணைக்கப்படும்.

மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது: தமிழ்நாட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 150 சேமிப்பு கிடங்குகள் வலுப்படுத்தப்பட்டு, கிடங்கு மேம்பாடு-ஒழுங்குமுறை ஆணையத்தின் (Warehousing Development and Regulatory Authority) அங்கீகாரம் பெற்று, வரும் ஆண்டில் மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது (e Negotiable Warehouse Receipts) முறை கொண்டுவரப்படும். இதன் மூலம், இந்தச் சேமிப்புக் கிடங்குகளில் விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களையும், வியாபாரிகள் கொள்முதல் செய்த விளைபொருட்களையும் சேமித்து, அவற்றின் மதிப்புக்கு ஏற்ப, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 80 சதவிகிதம் வரை கடன் உதவி பெற வழிவகை செய்யப்படும்.

மேலும், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் கடலூர், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 31,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 25 குளிர்பதனக் கிடங்குகளுக்கும் கிடங்கு மேம்பாடு-ஒழுங்குமுறை ஆணையத்தின் (WDRA) அங்கீகாரம் பெற்று மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்