சென்னை: தமிழகத்தில் குறைந்து வரும் நீர்வளம் தொடர்பாகவும், வேளாண்மைத் துறையின் சவால்கள் குறித்தும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விரிவாகப் பட்டியலிட்டுப் பேசினார்.
தமிழக வேளாண் பட்ஜெட் 2023-24-ஐ அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட் உரையில் தமிழகத்தில் குறைந்து வரும் நீர்வளம், வேளாண்மைத் துறையின் சவால்கள் குறித்து அவர் பேசியது: “இயற்கையோடு நடத்துகிற கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை இன்று மாறிவிட்டது. எண்ணற்ற சவால்கள் இன்று உழவர் பெருமக்களை சூழ்ந்திருக்கின்றன. விளைநிலங்கள் வீட்டுமனைகளாகின்றன. மக்கள்தொகை பெருகி வருகிறது. தொழிற்சாலைகள் தோன்றி வருகின்றன. நிலத்தின் பரப்பளவு வேளாண்மைக்குக் குறைந்து வருகிறது. எனவே, உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவது இன்றைய தேவை. புன்செய் நிலங்களிலும் மகசூலை அதிகப்படுத்தும் ரகங்களை பல்வேறு பயிர்களில் உண்டாக்குவது முக்கியம்.
வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் ரகங்களும், வெள்ளத்தைச் சமாளிக்கும் இரகங்களும், பருவநிலை மாற்றத்தால் கட்டாயமாக்கப்பட்ட தேவைகளாக மாறிவிட்டன. தானியங்களை மட்டுமல்ல; காய்கறிகளையும், பழங்களையும் போதிய அளவு உற்பத்தி செய்து, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியமான சவால். வெறும் மாவுச் சத்து மட்டுமே உண்டால், உடல் உபாதைகள் உண்டாகும். எனவே, புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுப் பொருட்கள், அமினோ அமிலங்கள் ஆகிய அனைத்தும் உணவின் மூலம் கிடைத்தால்தான் நாம் ஊட்டச்சத்தில் பாதுகாப்பை அடைந்ததாக உரக்கக் கூற முடியும்.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான இடுபொருட்களைப் போதிய அளவுக்கு விளைவித்துத் தருவதும், வேளாண்மைத் துறையின் கடமை. இவற்றையெல்லாம் மனதில் வைத்து, 2021-22 ஆம் ஆண்டில் பல தொலைநோக்குத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதன் காரணமாக மொத்த சாகுபடிப் பரப்பு, 1 லட்சத்து 93 ஆயிரம் எக்டர் அதிகரித்து, மொத்தமாக 63 லட்சத்து 48 ஆயிரம் எக்டர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
» ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம்: ரூ.40 லட்சத்தில் திருப்பணிகள் தொடக்கம்
» கோவில்பட்டியில் அரசுக் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் திடீர் போராட்டம்
உழவுக்கு மண்ணே அடித்தளமாக அமைகிறது. தேவையான சத்து இருக்கிற மண்ணே, மகசூலை அதிகப்படுத்த வல்லது. அதனால், மண் வளம் மங்காமலிருக்க, பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மண் பரிசோதனை நிலையங்களில் உழவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, மண்ணின் தன்மைக்கேற்ற பயிர்களும், அப்பயிர்களுக்குத் தேவையான உரங்களும் பரிந்துரை செய்யப்பட்டு, மண் வள அட்டைகள் வழங்கப்படுகின்றன. மண் வளம் காக்கும் பணிகளால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-22 ஆம் ஆண்டில், 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை அடையப்பெற்றது. இது 2020-21 ஆம் ஆண்டைவிட 11 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதல் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
நீர்நிலைகளைப் போற்றிப் பேணுவதும், அவற்றின் கொள்ளளவை அதிகரிப்பதும், நம் தலையாய பணி. ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றைத் தூர் வாரியதன் காரணமாகவும், அதிக எண்ணிக்கையில் நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கியதனாலும், பருவமழை நன்றாகப் பொழிந்ததாலும், தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்திருக்கிறது.
முதல்வர் 2021-ம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட நாளான ஜூன் 12-ம் தேதியன்றும், 2022-ம் ஆண்டில், 19 நாட்கள் முன்னதாக, மே 24-ம் தேதியன்றும் மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததனால், தஞ்சைத் தரணிக்கு தடையில்லாமல் நீர் கிடைத்து, வயல்களெல்லாம் நெல் பயிரினால் பச்சை தொற்றிக்கொண்டு பரவசமடைந்தன. இதனால், 2022-23-ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நிகழ்ந்து, சாதனை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் நிகழாத சாதனை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
நிலத்தடி நீரை முழுமையாகப் பயன்படுத்த மின்சாரம் முக்கியம். கால்வாயில் ஓடிவருகிற நீரை மண்வெட்டி கொண்டு திசைதிருப்பி உழவர்கள் பாய வைக்க முடியும். மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரை வெளிக்கொண்டு வர மின்சார இணைப்புகளின்றி இயலாது. முதல்வரின் ஆணைப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கி, சாதனை படைத்ததன் விளைவாக, வயல்களில் பம்புசெட்டுகள் மூலம் தண்ணீர் பாய்ந்து வருகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் ஆற்றலின் வடிவங்கள்; நம்பிக்கையின் சிகரங்கள்; உத்வேகத்தின் ஒட்டுமொத்தக் குறியீடுகள். இளைஞர்கள் வேளாண்மையில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும். அவர்கள்தான் துணிந்து சில பரிசோதனைகளை நிகழ்த்துவார்கள். இதை மனதில் வைத்து, 2021-22-ம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா 1 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலமாக ‘அக்ரி கிளினிக்’, வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன.
உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய விலை உத்தரவாதம் அளிக்கப்பட்டால்தான் உற்சாகத்தோடு உழவர்கள் உழைப்பார்கள். இதை எண்ணத்தில் கொண்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் உழவர்களிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்குமேல் கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. வரலாறு காணாத வகையில் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நெல் மட்டுமின்றி, பயறு வகைகளும், கொப்பரைத் தேங்காயும் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு 195 ரூபாய் கூடுதலாக வழங்கி, கொள்முதல் நிகழ்த்தப்படுகிறது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள், மின்னணு சந்தைகள் (eNAM), ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
வேளாண் தொழிலில் நாற்று நடுவதற்கும், களை பறிப்பதற்கும், கதிர் அறுப்பதற்கும், மனிதர்களைப் பயன்படுத்துவதைவிட, இயந்திரங்களைப் பயன்படுத்துவது எளிதாகவும், சிக்கனமாகவும் இருக்கிற காரணத்தினாலும், சாகுபடிச் செலவைக் கணிசமாகக் குறைப்பதாலும், வேளாண் பணிகளுக்குத் தேவையான அனைத்து வகையான இயந்திரங்களும் உழவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மூலம் அந்த இயந்திரங்களை வாடகைக்குப் பெற்றுப் பயன்படுத்தும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
உழைப்பைச் சிந்தி, வியர்வையை இறைத்து, தூக்கத்தைத் துண்டித்து, இரவைப் பகலாக்கி, பசியை மறந்து, உழைத்துப் பெற்ற விளைபொருட்கள் அறுவடைக்குப் பின்பு, வீணாவதைத் தடுத்திட, அரசு புதிய குளிர்பதனக் கிடங்குகள், தானியப் பாதுகாப்புக் கிடங்குகள், உலர் களங்கள் போன்றவற்றை அமைத்துக் கொடுத்து, அவர்கள் நலம் பேணும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது” என்று அமைச்சர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago