தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 | பசி வரும்போது அனைத்தையும் இழக்கும் மனிதன்: ஔவையார் பாடலை மேற்கோள் காட்டிய அமைச்சர்

By செய்திப்பிரிவு

சென்னை: பசி வருகிறபோது அனைத்தையும் மனிதன் இழந்து விடுகிறான் என்று பட்ஜெட் உரையில் ஔவையார் பாடலை மேற்கொள் காட்டி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசினார்.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 21) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும் அவர் ஔவையார் பாடலை மேற்கொள் காட்டிப் பேசினார். அதன் விவரம்:

‘இன்சொல் விளைநிலமா ஈதலே வித்துஆக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய்’கிற முதல்வர் அளித்த அரிய வாய்ப்பின் பொருட்டு, இன்று மூன்றாம் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை இந்தச் சபையின்முன் வைக்கின்ற மகத்தான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். அதற்காக முதல்வருக்கும், நெற்றி வியர்வையை நிலத்தில் பாசன நீராகப் பாய்ச்சி, கதிர்களை அறுவடை செய்யும் உழவர் பெருமக்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, எனது உரையைத் துவங்குகிறேன்.

பயிர்களை வளர்ப்பதற்கு நீரே அடிப்படை என்பதால், ஆற்றுப்படுகைகளில் குடியேற, நிலையான வாழ்க்கை நதிக்கரை ஓரங்களில் நங்கூரம் பாய்ச்சியது. அவனை நாடி வந்த காட்டு மிருகங்கள் அவன் கைப்பட்டு, வீட்டு விலங்குகளாயின; அவன், ஈட்டியிலிருந்து மண்வெட்டிக்கு மாறினான்; அம்புகளிலிருந்து கடப்பாரைகளுக்குத் தாவினான். கல்லாயுதத்திலிருந்து கலப்பைக்கு மருவினான். சிதைப்பதிலிருந்து செதுக்குவதற்கு நகர்ந்தான். அழிப்பதிலிருந்து ஆக்குவதற்கு முனைந்தான். உயிர்களை வேட்டையாடுவதிலிருந்து பயிர்களை உற்பத்தி செய்யத் தொடங்கினான்.

எத்தனைத் தொழில்கள் செழித்து வளர்ந்தாலும், மனிதனின் அடிப்படைத் தேவை உணவேயாகும். மகத்தான மனிதர்களும் உணவு சற்று தாமதமானால், உணர்ச்சிவசப்படுவதைப் பார்க்கிறோம். உணவுக்கும், உணர்வுக்கும் தொடர்புண்டு. ‘பசி வருகிறபோது அனைத்தையும் மனிதன் இழந்து விடுகிறான்’ என்பதைக் குறிப்பிடத்தான் தமிழ் மூதாட்டி ஔவையார்,
‘மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்’
என்று குறிப்பிடுகிறார்.

வேளாண்மையைத் தமிழர்கள் தொன்று தொட்டுப் பேணி வந்தார்கள் என்பதை நம் இலக்கியங்கள் சான்றுகளாக முன்வைக்கின்றன. சங்க இலக்கியங்களில் வேளாண்மை குறித்த எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன. உழவு பற்றி ஓர் அதிகாரத்தையே ஒதுக்கினார் திருவள்ளுவர். ‘பருவத்தே பயிர் செய்’ என்றும், ‘பூமி திருத்தி உண்’ என்றும், ஆத்திச்சூடி அறிவுறுத்துகிறது. ‘நீரகம் பொருந்திய ஊரகத்து இரு’ என்று கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.

நிலப்பரப்பையொட்டி தமிழர்கள் வாழ்வியல் முறையை வகுத்துக்கொண்டார்கள் என்பதை இலக்கியங்கள் இயம்புகின்றன. வெளிநாட்டு அறிஞர்களும் வேளாண்மையைப் பாராட்டி மகிழ்கின்றனர். வேளாண்மையே மனிதன் மேற்கொண்ட முதல் தொழில் என்பதை வரலாறு மட்டுமல்ல, மானுடவியலும் குறிப்பிடுகிறது. ‘வேளாண்மை என்பது பணி அல்ல, அது வாழ்க்கை முறை’ என்று லூயி தாம்சன் குறிப்பிடுகிறார். ‘உன்னதமான அறிவியல்’ என்று முதல் அகராதியைத் தொகுத்த டாக்டர் சாமுவேல் ஜான்சன் கூறுகிறார். இயற்கை வேளாண்மையை முன்வைத்த மசனோபு ஃபுகாகா (Masanobu Fukuoka) ‘வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பதல்ல, மனிதர்களைப் பண்படுத்துவது’ என்று குறிப்பிடுகிறார்.

இத்தகைய மகத்தான வேளாண்மை செழித்து வளரவேண்டும் என்பதற்காக தனி வேளாண் நிதிநிலை அறிக்கை அவையின்முன் வைக்கப்படும் என்கிற அறிவிப்பை நிலைநாட்டும் வகையில், இந்த மூன்றாவது வேளாண் நிதிநிலை அறிக்கை உங்கள் முன்பு வைக்கப்படுகிறது. உழவர் பெருமக்கள் உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெறவேண்டும், வர்த்தக ரீதியாக வருமானம் ஈட்ட வேண்டும், அறிவியலையும் உயர்ந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, மகசூலில் சாதனைகள் புரியவேண்டும் என்கிற அடிப்படையில்தான் சென்ற இரண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன." இவ்வாறு அமைச்சர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE