ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம்: ரூ.40 லட்சத்தில் திருப்பணிகள் தொடக்கம்

By ஆ.நல்லசிவன்

ஒட்டன்சத்திரம்: 23 ஆண்டுகளுக்கு பின் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, ரூ.40 லட்சத்தில் திருப்பணிகள் தொடங்கியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழநி சாலையில் மிகவும் பிரசித்திப் பெற்ற குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான இங்கு குழந்தை வடிவில் கையில் வேலுடன் காட்சி தருகிறார் முருகன். இங்கு வேண்டுதல்கள் நிறைவேற குழந்தை வேலப்பருக்கு மிட்டாய் வைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.

தைப்பூச திருவிழாவின் போது பாத யாத்திரையாக வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபட்ட பிறகே பழநிக்கு செல்கின்றனர். இக்கோயிலில் கடந்த 1999-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி கோயில் கோபுரங்கள், கட்டிடங்கள் சிதிலமடைந்த நிலை காணப்படுகிறது.

இதனிடையே, கும்பாபிஷேகம் நடந்து 23 ஆண்டுகள் ஆனதால் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கோயில் திருப்பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு, தற்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கியுள்ளது. திருப்பணிகள் முடிவடைந்ததும் அரசு அனுமதி வழங்கும் நாளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என கோயில் இணை ஆணையர் நடராஜன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE