ஒரு அரசுக் கட்டிடம் புதர்மண்டி பயன்படாமல் இருப்பது அதிசயமில்லை. ஆனால், கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளியங்காடு கிராமத்தில் வேளாண் துறையின் கட்டிடம் 15 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து கிடப்பதோடு, தினம், தினம் மதுக் குடியர்களுக்கான உண்டு உறைவிடம் மற்றும் கழிப்பிடமாகவும் பயன்பட்டு வருகிறது. இப்படியொரு அவலம் வேறெங்குமே இருக்க முடியாது என்கிறார்கள் இக்கிராமத்து மக்கள்.
காரமடையிலிருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் 15 கிமீ தொலைவில் உள்ளது வெள்ளியங்காடு. இந்த ஊரின் பிரதான பேருந்து நிறுத்தத்திலேயே இடதுபுறம் அமைந்திருக்கிறது இந்த கட்டிடம். வெளியே தூர்ந்து போய்க்கிடக்கும் இந்த கட்டிடத்தினுள்ளே சென்றால் உடனே மூக்கை பொத்திக் கொண்டு வெளியே வரவேண்டிய நிலை. அந்த அளவுக்கு உள்ளே காலி மது பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர்களும் குவியலாய் கிடக்கின்றன. அது தவிர, உள்ளே மூத்திரமும், மல நாற்றமும் குடலை புரட்டியெடுத்து விடுகிறது. இந்த கட்டிடத்தின் பின்புறத்தில் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கேயும், மது ஊற்றிய பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு கிடக்கின்றன.
இந்த கட்டிடத்தின் அடுத்த காம்பவுண்டில் பள்ளிக்கூடக் கட்டிடம். மாணவ மாணவிகள் இங்கே நடக்கும் கூத்துக்களை பார்த்து முகஞ்சுளித்து செல்வதையும் காண முடிகிறது. இப்படிப்பட்ட இடத்தில், எப்படி இதை இப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள் என்று கேட்டால் விவசாயிகளிடம் பெரும் கதையே நீளுகிறது.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘இங்கே வேளாண்துறை சார்பில் தகவல் தொடர்பு பயிற்சி வழித்திட்டம் 1980 வாக்கில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 2 அலுவலர்களும் இருந்தனர். வெள்ளியங்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி காலத்துக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கினர்.
அரசு வழங்கும் விதைகள் குறித்த விவரம், அரசு மானியத்துடன் உரங்களை எப்படி பெறுவது உள்ளிட்ட விவரங்களை விவசாயிகள் தோட்டத்துக்கே நேரடியாகச் சென்றும் தெரிவித்து வந்தனர்.
அதற்குப் பிறகு என்ன ஆச்சோ தெரியலை. 15 முதல் 10 ஆண்டுகளாகவே இதற்கு அதிகாரிகள் சரியா இல்லை. வெளியூர் அதிகாரிகள் வருவாங்க. பார்ப்பாங்க, போயிடுவாங்க. அப்புறம் வரவே மாட்டாங்க. இப்படி ஒரு அஞ்சு ஆண்டு. அதுக்கப்புறம் அதிகாரிகளே இல்லாம 10 ஆண்டு ஆச்சு. இப்ப வரைக்கும் யாரும் வரலை. ராத்திரி பகல்ன்னு இல்லை.
இங்கேயே தண்ணி அடிச்சுக்கறது. இங்கேயே படுத்துத் தூங்கறது. இது காலப்போக்கில சமூக விரோதிகள் தங்கும் கூடாரமாகவே மாறிப்போச்சு. காரமடை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து யாராவது எப்பவாவது வருவாங்க. அப்ப மட்டும் இங்கே உள்ளவங்க ஓடிப் போயிடுவாங்க’ என்றனர்.
இந்த கட்டிடத்தின் முன்புறம் தேநீர் கடை, டிபன் கடை சிலர் போட்டிருக்கின்றனர். ‘இந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்டா கூட நல்லாயிருக்கும். அது கூட செய்ய மாட்டேங்கறாங்க. இதுக்குள்ளே போற வர்றவங்களை ஏப்பா இப்படி செய்யறீங்கன்னு கேட்டா உன் வேலையப்பாருன்னு நம்மளையே மிரட்டறாங்க’ என்றனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி சு.பழனிசாமி கூறும்போது, ‘இந்த கட்டிடம் மட்டுமல்ல, இந்த வெள்ளியங்காட்டுக்கு அடுத்துள்ள அத்திக்கடவிலும், பில்லூரிலும் மின்வாரியத்துக்கு சொந்தமான ஏராளமான அரசுக் கட்டிடங்கள் புதர் மண்டி பராமரிப்பின்றி சமூக விரோதிகள் கூடாரமாகிக் கிடக்கிறது. அதை ஒழுங்குபடுத்திட சொல்லி பல மாதங்களுக்கு முன்பே கோவை ஆட்சியர் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் முறையிட்டுள்ளோம். அதிகாரிகள்தான் கண்டுக்கவே மாட்டேங்கறாங்க’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago