சில ‘வரவேற்பு’களுடன் பல ‘வேண்டும்’களை முன்வைத்த கே.பாலகிருஷ்ணன் |  தமிழ்நாடு பட்ஜெட் 2023 கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: ''மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் அறிவிப்புகளை வரவேற்கிறோம்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். எனினும், பல வலியுறுத்தல்களை அவர் முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு நிதியையும், அதிகாரங்களையும் மையப்படுத்தி குவித்துக் கொண்டு மாநிலங்களுக்கான பகிர்வினை குறைத்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டிற்கான கால வரம்பை நீட்டிக்க மறுக்கிறது. தமிழகத்திற்கு சேர வேண்டிய பல்வேறு நிலுவைத் தொகைகள் இன்னும் வந்து சேரவில்லை. இத்தகைய பின்னணியை கணக்கில் எடுத்துக் கொண்டு நிதிநிலை அறிக்கை மீதான கருத்துக்களை முன்வைக்க வேண்டியிருக்கிறது.

வருவாய் பற்றாக்குறை நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சரி பாதி அளவுக்கு குறைக்கப்பட்டதோடு, வரும் காலத்தில் அரசின் சமூக நலத் திட்டங்களுக்கும் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி மேலும் குறைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தகுந்தது. அதேபோல வரி வருவாய் அதிகரிப்பிலும் எளிய மக்களின் மீது சுமை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வரி அல்லாத வளங்களை திரட்டுவதிலும் முன்னேற்றம் காண வேண்டும். ஒன்றிய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை கோரி பெற வேண்டும். இதர மாநில அரசுகளையும் இணைத்துக் கொண்டு நிதி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தை நடத்திட வேண்டும்.

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என்பதும், தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்பங்களில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியவை. இன்றைக்கு நிலவும் பொருளாதார நெருக்கடியில் இதற்கான தகுதியை பரவலாக நிர்ணயிக்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தையும் அரசுத் துறை மூலமே செயல்படுத்துவது நல்லது. தமிழ் வளர்ச்சி பண்பாடு, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையின் கீழ் மாற்றுதல், ஒகேனக்கல் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள், மகளிருக்கு தனி ஸ்டார்ட் அப் தொழில்கள், பட்டியலின தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துதல் தொடர்பாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் நல்ல அம்சம்.

நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதிக்கான ஒதுக்கீடு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் துறைகளுக்கு ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதோடு முகாம்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அவர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்கவும் நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்புக்குரியது. பாதாள சாக்கடைகளையும் கழிவு நீர் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறையை தடுக்க தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைவிட அரசே நவீன இயந்திரங்களை வாங்குவதும் அவற்றை செயல்படுத்த சாதி வித்தியாசம் இல்லாமல் ஊழியர்களை பயிற்றுவிப்பதும் சமூக நீதியின் முக்கிய அம்சம் எனக் கருதுகிறோம்.

ஆதி திராவிடர் நலத்துறைக்கான ஒதுக்கீடு 16 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட நலப் பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டதை கணக்கில் எடுத்தாலும் கூட, இந்த குறைவு கவலையளிக்கிறது. ஊரக வேலை உறுதி திட்ட வேலை நாட்களை 150 ஆக உயர்த்துவோம் என்கிற வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

ஒன்றிய அரசு இதற்கான நிதியை மிக மோசமாக வெட்டிச் சுருக்கி இருக்கும் பின்னணியில் மாநில அரசாவது உதவிக்கரம் நீட்டும் என கிராமப்புற ஏழைகள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல், நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்தி அதற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்வது நகர்ப்புற ஏழைகளுக்கு பெருமளவு உதவும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஒன்றிய அரசின் கொள்கைகளால் மிகவும் நலிவடைந்துள்ள சூழலில் அதற்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத் தகுந்தது. ஆனாலும், அவர்களுக்கான நெருக்கடி மிக அதிகம். தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, நிலைக் கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். காவல்துறை, அரசு தரப்பு வழக்கறிஞர்கள், நீதித்துறை உள்ளிட்டோருக்கு பாலின நிகர்நிலை தொடர் பயிற்சிக்கான திட்டங்களை உருவாக்கி உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

சாதிய, பாலின பாகுபாடுகளை களையக் கூடிய விதத்தில் சமூக சீர்திருத்த தொடர் பரப்புரைக்கான நிதி ஒதுக்கீடு அவசியம். நுண் நிதி நிறுவனங்களின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட சுய உதவிக்குழுக்களுக்கு முறைசார்ந்த கடன் வசதியை அரசு மேம்படுத்திட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து வேலை வாய்ப்புகளிலும் 4 சதவிகிதம் சட்ட ரீதியான ஒதுக்கீடு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

அனைத்து இடங்களுக்கும் எளிதாக சென்று வருவதற்கான தடையற்ற சூழலை சட்டப்படியாக உருவாக்கிட வேண்டும். சுமார் 35 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகை ஓய்வூதியத்தையும் அதிகரிப்பதோடு உரியவர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தொழில் துறையில் பெறப்படும் முதலீடுகளை பொறுத்தவரை இத்தகைய நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு ஊக்க முனைவுகள் வேலை வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கக் கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும்.

பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது என்பதில் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துவது முக்கிய அம்சமாக இடம் பெற வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு பல்வேறு விதமான நோய்கள் பரவுகிற சூழலில் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு மேலும் உயர்த்தப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதனை வருவாய் ஆதாரமாக மட்டும் பார்த்து விடாமல் இதன் சமூக பாதிப்புகளை கணக்கில் எடுக்க வேண்டும்.

போதைப் பொருள் பயன்பாடு ஒரு முக்கிய பிரச்சனையாக தமிழகத்தில் முன்னுக்கு வந்திருக்கிறது. அதை எதிர்த்த பிரச்சாரத்திற்கும், தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவதற்கான கொள்கை அறிவிப்பு கூட நிதி நிலை அறிக்கையில் இல்லை என்பது கவலை அளிக்கிறது.

பல்வேறு மாநிலங்கள் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறோம். மேலும், நிரந்தரப் பணிகளை ஒப்பந்த முறையாகவும், வெளி முகமை பணியாகவும் மாற்றுவது தொழிலாளர் உரிமைகளை பறிப்பதாகும், இதனால் இட ஒதுக்கீடும் பின்னுக்கு தள்ளப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு நிரந்தர அரசு பணிகளை பாதுகாப்பது முக்கியமானது என சுட்டிக்காட்டுகிறோம்.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கான ஊதியத்தை முறைப்படுத்திடவும், ஓய்வூதியம் அளித்திடவும் வேண்டும். போக்குவரத்து தொழிலாளிகளுக்கு நீண்ட காலமாக அளிக்கப்படாத பஞ்சப்படி நிலுவையை உடனடியாக அளித்திட வேண்டும். மின்வாரிய ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்படாமல் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.

தற்போதுள்ள சூழலில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நலத்திட்டங்களை மேலும் விரிவாக்கி முன்னெடுக்க வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது''என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்