இனி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் சமூகப் பள்ளிகள் - திருமாவளவன் பாராட்டு | தமிழ்நாடு பட்ஜெட் 2023 கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் 2023 குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 'மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு வழிகாட்டும் 'சமூகநீதி மாநிலம்' தமிழ்நாடு என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் சிறப்பான அறிக்கை ஆகும். திமுகவின் திராவிட முன்மாதிரி அரசு உருவாக்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டி வரவேற்கிறோம்.

'கோவிட்' பெருந்தொற்றின் காரணமாகவும், இதற்கு முன்பிருந்த அதிமுக அரசின் நிர்வாகத் திறனின்மையினாலும் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக வீழ்ச்சி அடைந்திருந்தது. வருவாய்ப் பற்றாக்குறை 3.28% என்ற நிலையில் இருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளுக்குள் அந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியதோடு வருவாய்ப் பற்றாக்குறையை 1.23% ஆகக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் போரின் காரணமாக உலக நாடுகளெல்லாம் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாடு அரசின் இச்சாதனை பாராட்டுதலுக்குரியதாகும்.

தமிழ்நாட்டைத் தொழில் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக மாற்றும் வகையில் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தொழில் வளர்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக எட்டவேண்டும் என்ற நோக்கில் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் அது சென்று சேர வேண்டும் என்பதற்காக 1.4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 2.14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் தொழில்கள் இந்த நிதி ஆண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை மனதார வரவேற்கிறோம்.

தொழில் வளர்ச்சியின் அங்கமாக கோவையிலும் மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் துவக்கப்படும் என்றும்; ஈரோடு, செங்கல்பட்டு , திருநெல்வேலி ஆகிய இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 'திராவிட முன்மாதிரி' என்பது எளிய மக்களுக்கான சமூகநீதியைக் கட்டிக் காப்பது தான் என்பதை நமது முதலமைச்சர் அவர்கள் தனது செயற்பாடுகளின் மூலம் உணர்த்தி வருகிறார். அந்த வகையில், புதிதாக ஒரு இலட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு ஏழை எளிய மக்களின் வயிற்றில் பால் வார்ப்பதாகும்.

சமூகத்தில் மிகவும் நலிந்த பிரிவினராக இருக்கும் ஆதிதிராவிட- பழங்குடியின மக்களின் மேம்பாடு குறித்தும், தமிழ்மொழி மேம்பாடு குறித்தும் பல்வேறு கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே முதலமைச்சரிடம் முன் வைத்திருந்தோம். அந்தக் கோரிக்கைகளில் பலவற்றை இந்த நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றியிருகிறார் என்பதை மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டுகிறோம்.

குறிப்பாக, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களப்பலியான ஈகியர் நடராசன்- தாளமுத்து ஆகியோருக்கு நினைவிடம் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அது ஏற்கப்பட்டு அதற்கான அறிவிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

அது போலவே அரசு நடத்தும் பள்ளிகளின் பெயர்களில் சாதி அடையாளங்களை நீக்க வேண்டும் என்றும் எஸ்சி; எஸ்டி மக்களுக்கான துணைத் திட்டங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 'சிறப்பு சட்டம்' இயற்ற வேண்டும் என்றும்; அண்டை மாநிலமான தெலுங்கானாவில் செயல்படுத்தப்படும் தலித் பந்து திட்டத்தைப் போல் தலித் தொழில் முனைவோருக்கு திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த வேண்டுகோள்களையெல்லாம் ஏற்கிற வகையில் முதல்வர் அவற்றுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதாவது, ஆதிதிராவிடர், கள்ளர், பழங்குடியினர் என சாதிகளின் பெயரில் இயங்கிய சமூகப் பள்ளிகள் அனைத்தும் இனி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அது போலவே 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எஸ்சி- எஸ்டி துணைத் திட்டங்களைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டம் அடுத்த கூட்டத் தொடரில் இயற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளுக்காக எமது மனமார்ந்த நன்றியை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துகளைச் செம்பதிப்பாகத் தமிழில் வெளியிடும் திட்டம் மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் ஆதிதிராவிடக் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய அறிவிப்புகளை வரவேற்றுப் பாராட்டுகிறோம். தமிழ்ப் பண்பாட்டுப் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் 'சோழர் அருங்காட்சியகம்' அமைக்கப்படுமென அறிவித்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்டுள்ள அறிவிப்புகளுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத 'மகளிர் உரிமைத்தொகை' திட்டம் எதிர்வரும் செப்டம்பர்-15 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 7,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மகளிருக்கெனப் புதிய திட்டங்களை உருவாக்கியதில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு இந்த அறிவிப்பின்மூலம் உலகத்திலேயே முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெறுகிறது.

ஒட்டு மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும். சமூக நீதி மாநிலம் இதுவென்ற பெருமையை நிலைநாட்டும்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்