மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பு தாமதமானது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "2011-21 வரை 10 ஆண்டு இருண்ட கால அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படுத்தி வைத்துவிட்டு போன நிர்வாகச் சீர்கேடு மற்றும் நிதிச்சீரழிவுகள் காரணமாக, ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1000 ரூபாய் உரிமையைத் தொகையை வழங்க இயலவில்லை" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட மாடல் அரசின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'திராவிட மாடல்' என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டு வெளியாகி உள்ளது. 'திராவிட மாடல் என்றால் என்ன?' என்று கேட்டவர்களுக்கு, “அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்று நான் பதில் அளித்தேன். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்று நான் விளக்கி இருந்தேன். இந்த நிதிநிலை அறிக்கை என்பது திராவிட மாடல் கருத்தியலை முழுமையாக உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.

எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் அதனுடைய முகமாக இருப்பது ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைதான். ஓராண்டு காலத்துக்கான அறிக்கையாக மட்டுமல்லாமல், அடுத்தடுத்து வரக்கூடிய ஆண்டுகளை வழிநடத்தும் அறிக்கையாகவும் அவை அமைந்திருக்கும். அந்த வகையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான அறிக்கை என்பது, தலைமுறைகளைத் தாண்டி வாழ்வளிக்கும் அறிக்கையாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுக்க வாழ்க்கைக்கு உதவி செய்யப் போகும் பல்வேறு நலத்திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை மாதம்தோறும் வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். 2011-21 வரை 10 ஆண்டு இருண்ட கால அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படுத்தி வைத்துவிட்டு போன நிர்வாகச் சீர்கேடு மற்றும் நிதிச்சீரழிவுகள் காரணமாக, ஆட்சிப் பொறுப்பேற்றதும் 1000 ரூபாய் உரிமையைத் தொகையை வழங்க இயலவில்லை. தங்களது கையாலாகாத்தனத்தால் தமிழ்நாட்டை மொத்தமாக நாசப்படுத்திவிட்டது அதிமுக ஆட்சிக்காலம். இதனை உணர்ந்த காரணத்தால், நிர்வாகத்தைச் சரிசெய்து, நிதியையும் சரிசெய்ய திமுக அரசுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வரும்போது 62 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறையை நடப்பு மதிப்பீடுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைத்துள்ளோம். தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. வேளாண் உற்பத்தி பெருகி இருக்கிறது. பொதுமக்களின் சமூகப் பங்களிப்பு பெருகி உள்ளது. இதன் மூலமாகத் தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றத்தின் அடையாளமாக நிதியும் ஓரளவு தன்னிறைவு பெரும் சூழலை எட்டி வருகிறது.

இந்த நிலையில் மக்களுக்கு அளித்த மிக முக்கியமான வாக்குறுதியான 1000 ரூபாய் உரிமைத்தொகை என்பதை அறிவித்துள்ளோம். இதற்கு முதல் கட்டமாக 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகும் மகத்தான அறிவிப்பாக இது இந்த நிதிநிலை அறிக்கையில் அமைந்துள்ளது.

பள்ளி மாணவர்க்கு காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு வரும் மாணவியர்க்கு 1000 ரூபாய், குடிமைப் பணித் தேர்வுக்குப் பயிற்சி பெறும் தேர்வாளர்களுக்கு மாதம்தோறும் 7500 ரூபாய், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத் தொழில் முனைவோரை உருவாக்க அண்ணல் அம்பேத்கர் பெயரால் திட்டம், புதிரை வண்ணார் நல வாரியம் புத்துயிர்ப்பு, ஆதி திராவிடர் குடியிருப்புகளையும், அவர்தம் சமுதாய வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அயோத்திதாசப் பண்டிதர் பெயரால் மேம்பாட்டுத் திட்டம், பின்தங்கிய வட்டாரங்களை வளர்க்க வளமிகு வட்டாரங்கள் திட்டம், சென்னையைச் சீராக வளர்க்க வடசென்னை வளர்ச்சித் திட்டம், இலங்கைத் தமிழர்க்கு 3,959 வீடுகளைக் கட்டித் தருதல், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் 1 லட்சம் பேருக்குக் கூடுதலாக வழங்குதல் , பெண் தொழில்முனைவோர்க்கான புத்தொழில் இயக்கம், மாற்றுத்திறனாளிகள் - சிறுபான்மையினர் - பிற்படுத்தப்பட்டோருக்கான திட்டங்கள் எனத் தமிழ்நாட்டில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டம், தலைவர் கலைஞர் பெயரால் மதுரையில் மாபெரும் நூலகம், மொழிப்போர்த் தியாகிகளுக்கு சென்னையில் நினைவிடம், தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு, தமிழர் பண்பாட்டுக் கடல் வழிப் பயணங்கள் ஊக்குவிப்பு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், சங்கமம் விழா, நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் ஆகிய தமிழ் - தமிழர் அறிவு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்கும் அறிக்கையாக இது அமைந்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு, கோவையிலும் மதுரையிலும் மெட்ரோ ரயில், சென்னையில் பேருந்து பணிமனைகள், 1000 புதிய பேருந்துகள், புதிய ரயில் திட்டங்களுக்கான முன்னெடுப்புகள், சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையில் நான்குவழி மேம்பாலம், சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்பு உருவாக்கம், கோவையில் செம்மொழிப்பூங்கா, அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள், 320 கோடி ரூபாய் மதிப்பில் நீர்வழிகள் தூர்வாருதல், 15 நீரேற்று மின் திட்டங்கள், சேலத்தில் ஜவுளிப் பூங்கா, புதிய சிப்காட் பூங்காக்கள், தொழில்நுட்ப நகரங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் எனப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதர் நலனை உள்ளடக்கியும், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்தும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. நிகழ்காலத்துக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தையும் உள்ளடக்கியதாக இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன.மகளிர், மாணவ - மாணவியர், இளைஞர், ஏழை எளிய விளிம்பு நிலை மக்களைக் கை தூக்கிவிடுவதன் மூலமாக அவர்களை மட்டுமல்ல, அவர்கள் வழியில் வர இருக்கிற தலைமுறையையும் சேர்த்து இந்த நிதிநிலை அறிக்கை வளர்த்தெடுக்க இருக்கிறது. இதனைத்தான் ஒற்றைச் சொல்லாக 'திராவிட மாடல்' என்று நாங்கள் சொல்கிறோம்.

இது ஒரு கட்சியின் அரசல்ல; ஓர் இனத்தின் அரசு. கொள்கையின் அரசு என்று நாங்கள் சொல்லி வருவதை உறுதிப்படுத்துவதாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி , 'மின்மினிப் பூச்சியைப் போன்றது இந்த அறிக்கை. மின்மினிப் பூச்சியில் இருந்து வெளிச்சம் கிடைக்காது' என்று சொல்லி இருக்கிறார்.கழக அரசு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது உதயசூரியனைப் போல் அனைவருக்கும் ஒளியூட்டக் கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல. உதயசூரியனின் வெப்பத்தில் மின்மினிப்பூச்சிகள் காணாமல் போய்விடும். இருண்ட காலத்தைத் தமிழ்நாட்டுக்கு வழங்கிய அவரால் உதயசூரிய ஒளியைப் பார்க்க முடியாமல் தவிப்பதையே அவரது பேட்டி உணர்த்துகிறது.

நிதிநிலைமை சீராக இருந்திருக்குமானால் இன்னும் பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருக்க முடியும் என்பதே எங்களது எண்ணம். கடந்த அதிமுக ஆட்சியில் இருண்டகால நிதிநிலைமையைச் சீர்செய்தும், முன்னேற்றியும், முற்போக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும், தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கையை உருவாக்கிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு உறுதுணையாக இருந்த நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தத்திற்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிதித்துறையின் பிற அலுவலர்களுக்கும் நன்றி.

அறிவிக்கப்பட்ட இத்திட்டங்களை முறையாக நிறைவேற்றி உரிய காலத்தில் முடித்து, முழுப்பயனையும் மக்களுக்கும் மாநிலத்துக்கும் வழங்க அமைச்சர்கள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் அயராது பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.'எல்லார்க்கும் எல்லாம்' என்ற திசை நோக்கிய நமது பயணம் தொடரும், வெல்லும்" என்று அவர் கூறியுள்ளார். | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்