சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் திங்கள்கிழமை காலை தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசின் 2-வது முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் ஆகியன அறிவிக்கப்பட்டன. பட்ஜெட் என்றாலே புதிய அறிவிப்புகள், சலுகைகள் என்னவென்ற எதிர்பார்ப்புதான் முதலில் மேலோங்கும். அந்த வகையில் துறை வாரியான புதிய அறிவிப்புகளின் தொகுப்பு இது:
தமிழ் வளர்ச்சி, பண்பாடு சார்ந்த அறிவிப்புகள்: * மொழிப்போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும்; அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக அரசால் ஐந்து கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
* தொழில்நுட்பத் துறையில், தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம், தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு, புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு, ‘தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும். தமிழ்மொழியில் பெருமளவில் மென்பொருட்கள் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.
* கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர் பெருமை கூறும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில், தமிழர்பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும்.
* நமது தாய்மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினை கருத்திற்கொண்டு அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில், மேலும், 591 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும்.
* சென்னையில் அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ள சங்கமம் கலை விழா, வரும் ஆண்டில் மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
* உலகாண்ட சோழர்களின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் "மாபெரும் சோழர் அருங்காட்சியகம்" ஒன்று அமைக்கப்படும்.
படைவீரர்கள் நலன்: தம் இன்னுயிர் ஈந்து நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் படை வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில், போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளின் போது உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை 20 இலட்சம் ரூபாயிலிருந்து, இருமடங்காக உயர்த்தி 40 இலட்சம் ரூபாயாக வழங்கப்படும். மேலும், வீரதீரச் செயல்களுக்கான உயர் விருதுகளைப் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினருக்கு தற்போது வழங்கப்படும் பரிசுத்தொகையும் நான்கு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு: கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1,000 படுக்கைவசதி கொண்ட ‘கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை’ இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும்.
திருச்சிராப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் உயர்மருத்துவ சிகிச்சைத் தேவைகளை நிறைவு செய்து வரும் மகாத்மா காந்தி நினைவு அரசினர் மருத்துவமனையில், 110 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
வடசென்னை பகுதி மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் விடுதிக்கு புதிய கட்டடங்களும் 147 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
பள்ளிக் கல்வி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.
* அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை ‘திறன்மிகு மையங்களாக’ மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் அரசு தொடங்கும். இக்கல்வி நிறுவனங்களில், கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடத்திட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும். இத்திட்டத்தில், 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘திறன்மிகு மையங்களாக’ தரம் உயர்த்தப்படும்.
* தொழிற் பயிற்சி நிறுவனங்களிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன், 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்' (TN-WISH) அமைக்கப்படும்.
யுபிஎஸ்சி தேர்வு: கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தப் போக்கை மாற்றியமைக்க, குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும். ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன்: சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை இந்த அரசு அமைக்கும். இது விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும். இதற்கு, பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலன்: மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்படும். இந்த விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
’அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம், வரும் நிதியாண்டிலிருந்து ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் இயந்திரங்களையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்காக, 35 சதவீதம் மூலதன மானியமும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’: நகர்ப்புறப் பகுதிகளிலும் ஊரகப்பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, முழுமையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.
காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 1,937 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 1,48,315 மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,543 தொடக்கப் பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதில், 624 பள்ளிகளில் 10 சதவீதமும், 462 பள்ளிகளில் 20 சதவீதமும்,193 பள்ளிகளில் 30 சதவீதமும் என மாணவர் வருகை அதிகரித்துள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.
வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் 18 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
‘புத்தொழில் இயக்கம்’ பெண் தொழில்முனைவோர்கள், தேவையான கடன்களை உரிய நேரத்தில் பெறுவதிலும், பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், தொடர்ந்து இடர்ப்பாடுகளை சந்திக்கின்றனர். இச்சவால்களை எதிர்கொள்ள, பெண்களுக்கென சிறப்பு ‘புத்தொழில் இயக்கம்’ ஒன்றை அரசு தொடங்கும். பெண் தொழில்முனைவோர், புத்தொழில்களை தொடங்குவதற்கு அனைத்து வகையிலும் இந்த இயக்கம் உதவும்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம்: பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும், கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வருங்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசுபாட்டைக் குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டத்தை 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த அரசு செயல்படுத்த உள்ளது.
“தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்”: அழிந்து வரும் வன உயிரினங்களைக் காக்க ஒரு தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வனப்பரப்பு அவசியம். எனவே, நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை, தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் “தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்” என்னும் புதிய சரணாலயத்தை இந்த அரசு ஏற்படுத்தும். இது மாநிலத்தின் 18வது வனவிலங்கு சரணாலயமாகும்.
ஊரக வளர்ச்சி: முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை அரசு இவ்வாண்டு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முக்கியமான இணைப்புச் சாலைகள், பேருந்துகள் இயங்கும் சாலைகள் தரம் உயர்த்தப்படும். வரும் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,145 கி.மீ. சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும், 10,000 சிறிய நீர் நிலைகள், குளங்கள், ஊரணிகள் 800 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
கூவம் சீரமைப்பு: சிங்காரச் சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை 50 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.
எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும்.வரும் ஆண்டில் வெள்ளத் தடுப்புப் பணிகளும், நீர் வழிகளைத் தூர்வாரும் பணிகளும் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
நெடுஞ்சாலைகள்: வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும். புதுப்பிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. 1,000 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும். 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மெட்ரோ ரயில்: கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
தூங்காநகரமான மதுரை மாநகரம், தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ இரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ இரயில் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும். இந்த இரண்டு நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ இரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
எரிசக்தி: வாய்ப்புகளையும் தமிழ்நாடு தன்னகத்தே கொண்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இருக்கும் வகையில் பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம் ஒன்றை அரசு உருவாக்கும்.2030ஆம் ஆண்டுக்குள், 77,000 கோடி ரூபாய் செலவில் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அரசு-தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
கைத்தறி: கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் நலனில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகின்றது. 76,356 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 200-இல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 1.64 இலட்சம் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 750 இல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சேலத்தில் ஜவுளிப் பூங்கா: சேலத்தில் சுமார் ரூ.880 கோடி செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்றிய மாநில அரசுகளின் நிதியுதவியுடனும் தனியார் தொழில் முனைவோர் பங்களிப்புடனும் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. கைத்தறிப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் 20 கோடி ரூபாய் செலவில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும்.
தொழில்துறை: 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்படவுள்ளது.
புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள்: விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதனால், ஏறத்தாழ 22,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தொழில்நுட்பத் துறை: ‘Simple Gov’ திட்டம் - மின்னணு முறையில், நேரடியாக, எளிதான, வெளிப்படையான முறையில் அனைத்து சேவைகளையும் மக்களுக்கு வழங்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நோக்கத்தை எய்த, ‘Simple Gov’ என்ற ஒரு புது முயற்சியை அரசு தொடங்கும். இம்முயற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசுத்துறைகளின் நடைமுறைகளையும் சேவைகளையும் கணினிமயமாக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
TNTech city திட்டம்: சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில்,“தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city)” இந்த அரசு அமைக்கும்.ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகை: தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago