விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் குடிநீர் சிக்கலை தீர்க்க செய்யாறு - பெண்ணையாறு இணைப்பு கால்வாய் வெட்டப்பட்டு, நந்தன் கால்வாயோடு இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன் மூலம் 60க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் சிக்கல் தீர்வதோடு, 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பயன்பெறும். சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் தென்பெண்ணையாறு வழியாக கடலில் கலக்கும். இந்த தண்ணீரை 16.40 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து திருப்பிவிட்டால் சுமார் 10 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
இதனால் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். எனவே தென்பெண்ணையாறு - துரிஞ்சலாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சமுத்திர ஏரியின் கீழ்பகுதியில் பல்லவர் காலத்தில் இரண்டாம் நந்திவர்மனால் நந்தன் கால்வாய் வெட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. சம்மந்தனூர் என்னும் இடத்தில் ஓலையாறு, துரிஞ்சல் ஆறுகள் சந்திக்கும் இடத்தில் கீரனூர் அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையில் இருந்து மழைக்காலங்களில் வழிந்தோடும் தண்ணீர் தான் நந்தன் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 55 ஏரிகள் நிரம்பும். அந்தத் தண்ணீர் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்ளுக்கு பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். சமுத்திர ஏரியின் மேற்பகுதியில் செய்யாறு - பெண்ணையாறு இணைப்புக் கால்வாய் வெட்டப்பட வேண்டும்.
சாத்தனூர் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் பெண்ணையாறு வழியாக வீணாகக் கடலில் கலந்து விடுகிறது. இணைப்புக் கால்வாய் வெட்டினால், வீணாகும் தண்ணீரை கீரனூர் அணைக்கட்டுக்கு திருப்பி விடலாம். இந்த தண்ணீர் பனமலைப் பேட்டை ஏரி இடது வாய்க்கால் மூலம் நங்கத்தூர் நகர், முட்டத்தூர், பிரம்மதேசம், எசாலம் ஏரியின் வழியாக சங்கராபரணி ஆற்றில் கலந்து, வீடுர் அணைக்குச் செல்லும்.
பனமலைப்பேட்டை வலது வாய்க்கால் மூலம் அன்னியூர், வெள்ளேரிபட்டு, செம்மேடு, சிறுவாலை, வீரமூர், வெங்கமூர் வழியாக பம்பை வாய்க்காலில் கலந்து வாதானூர் அணைக்கட்டு வழியாக புதுச்சேரி கடலில் கலக்கிறது. இந்த திட்டத்தை மேற்கொள்ளும்பட்சத்தில் இந்த வரத்து பகுதிகளின் செஞ்சி, விக்கிரவாண்டி, வானூர், விழுப்புரம் வட்டங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் பிரச்சினை தீரும்.
இப்பகுதியைச் சுற்றியுள்ள 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும். இத்திட்டத்தை நிறைவேறித் தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்: செய்யாறு - பெண்ணையாறு இணைப்பு வாய்க்கால் வெட்ட அரசு விவசாயிகளிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் இந்தத் திட்டம் கிடப்பில்தான் உள்ளது. இந்தப் பகுதியில் நிலத்தடி நீரானது 500 அடிக்கும் கீழ் சென்று விட்டது.
தற்போது விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வறண்ட பகுதியாக மாறி விட்டது. இதனால் இந்தப் பகுதி விவசாயிகள் கூலியாட்களாக வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டனர் என்று விவசாயிகளும் விவசாய சங்க நிர்வாகிகளும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ புஷ்ப ராஜிடம் கேட்டபோது, “நான் எம்எல்ஏவாக இருக்கும்போது இதுபற்றி சட்டப்பேரவையில் பேசியுள்ளேன். நந்தன் கால்வாய் திட்டத்திற்கு முதன் முதலில் திமுக ஆட்சியில் தான் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது” என்றார்.
சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தியிடம் கேட்டபோது, “தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசி நந்தன் கால்வாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது இணைப்புக் கால்வாய்க்கு அரசு நிதி ஒதுக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்” என்றார்.
விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியிடம் கேட்டபோது, “தற்போது கூடவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நந்தன் கால்வாய் திட்டம் முழுமையடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
மயிலம் எம்எல்ஏ சிவகுமாரிடம் கேட்டபோது, “நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். தலைவரின் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, “இந்த அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. இருப்பினும் அதிமுக எம்எல்ஏக்களான திண்டிவனம் அர்ஜூனன், வானூர் சக்கரபாணியை சட்டப்பேரவையில் பேசச் செய்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல சொல்கிறேன்” என்றார்.
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தானிடம் கேட்டபோது, “இணைப்புக் கால்வாய் பணிகள் நடைபெறும் பெரும்பான்மை பகுதிகள் கீழ்பென்னாத்தூர் தொகுதியை சேர்ந்தது என்பதால் அந்த தொகுதி எம்எல்ஏவான, பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டியின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி ஒதுக்க குரல் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். மேலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன்” என்றார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் கேட்டபோது, “இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்”என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago