28ம் தேதி போக்குவரத்துத் துறை பணியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் - பணியளர் ஒன்றிப்பு அறிவிப்பு

By வி.சீனிவாசன்

சேலம்: தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வரும் 28ம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்துத் துறை பணியளர் ஒன்றிப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில், தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். மாநாட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில சிறப்பு தலைவர் குருபாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியது: போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் பணியாற்றும் சூழல் உள்ளது.

எனவே, சோதனைச் சாவடிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வெளிநபர்கள் பொய்யான புகார்களை கூறி ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஓய்வு பெற்ற பணியாளர்கள் தொடர்பான கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய உத்தரவுகள் வழங்கி அவர்களின துயர் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் திருச்சியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE