கோவை: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ், சிகிச்சைக்கு பிறகு அரசு ஓய்வூதியரின் மருத்துவ செலவை திருப்பி அளிக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க இயலாது எனவும், உரிய காப்பீட்டை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் எனவும் காப்பீட்டு நிறுவனம் மற்றும் கருவூல கணக்கு துறைக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை சுல்தான்பேட்டையைச் சேர்ந்த மௌனசாமி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அறிமுகப்படுத்திய புதிய காப்பீட்டு திட்டத்தின்படி 2018 ஜூலை 1-ம் தேதி முதல் 2022 ஜூன் 30-ம் தேதி வரை யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தில் எனக்கு காப்பீடு இருந்தது.
காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இருதயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்காக 2018 செப்டம்பர் 7-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். இந்நிலையில், காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனம் (டிபிஏ), காப்பீட்டு திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சை வராது என்று கூறி எனது கோரிக்கையை செப்டம்பர் 14-ம் தேதி நிராகரித்துவிட்டது. இதையடுத்து, மருத்துவ செலவான ரூ.10.15 லட்சம் முழுவதையும் ரொக்கமாக செலுத்தி அறுவைசிகிச்சையை மேற்கொண்டேன்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு, காப்பீட்டு திட்ட குறைதீர்க்கும் அலுவலரான ரேஸ்கோர்ஸில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் புகார் தெரிவித்தேன். ஆனால், அவர் மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனத்தின் காரணத்தை ஏற்றுக்கொண்டு, புகாரை நிராகரித்தார்.
இதையடுத்து, கருவூல கணக்கு துறையில் மனு அளித்தேன். ஆனால், எனது கோரிக்கையை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அறுவை சிகிச்சை நிபுணர் அளித்த கடிதத்தையும் பொருட்படுத்தவில்லை. எனவே, காப்பீட்டு திட்டத்தின்படி மருத்துவ செலவுக்காக எனக்கு கிடைக்க வேண்டிய ரூ.7.50 லட்சத்தை அளிக்கவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கவும் காப்பீட்டு நிறுவனம், கருவூல கணக்கு துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியர்கள் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறும் வகையில் புதிய காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
இதற்கான பிரீமியம் தொகை அவர்களின் ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. பணமில்லாமல் சிகிச்சை பெற மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனத்திடம் மனுதாரர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, சுகாதாரத் துறை இணை இயக்குநரும், மனுதாரர் பெற்ற சிகிச்சை குறித்து, மருத்துவ நிபுணர் அளித்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளாததற்கான காரணத்தை தெரிவிக்காமல், அனுமதிக்கப்பட்ட பட்டியலில் இந்த சிகிச்சை இல்லை என்று கூறி கோரிக்கையை நிராகரித்துள்ளார். மருத்துவரின் சான்றை மறுப்ப தற்கு எந்த ஆவணத்தையும் எதிர்மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை.
மேலும், சிகிச்சைக்கு பிறகு, செலுத்திய பணத்தை திரும்ப பெறும் நடைமுறை இந்த திட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை என காப்பீட்டு நிறுவனமும், கருவூல கணக்கு துறையும் தெரிவித்துள்ளது. முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்க பணமில்லாமல் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை மாற்ற இயலாது. ஆனால், பணமில்லாமல் சிகிச்சை பெற அனுமதி மறுக்கப்பட்டபிறகு, அடுத்த கட்ட நடவடிக்கையாக பணத்தை திரும்பபெறும் வழிமுறை காப்பீட்டு திட்டத்திலேயே உள்ளது. எனவே, காப்பீட்டு நிறுவனம், கருவூல கணக்கு துறையின் வாதத்தை ஏற்றுக்கொள்ள இயலாது.
மருத்துவ செலவுகளுக்காக மனுதாரருக்கு காப்பீட்டு திட்டத்தின்படி கிடைக்க வேண்டிய அதிகபட்ச தொகையான ரூ.7.50 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம், கருவூல கணக்கு துறை இணைந்து அளிக்க வேண்டும். மேலும், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தர விட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago