சென்னை: "காவல் துறையை தன் கைவசம் வைத்துள்ள இந்த அரசின் முதல்வர், காவல் நிலையத்தைத் தாக்கியவர்களை அடக்கி ஒடுக்காமல், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்" என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு முறையான ஆட்சி நடைபெற்றது. மக்கள் சுதந்திரமாக நடமாடினர். 2006 முதல் 2011 வரை திமுக தமிழகத்தை ஆட்சி செய்த காலத்திலேயே, மதுரைக்கு சுதந்திரமாக போகக்கூட இயலாத நிலையில் இருந்த தற்போதைய முதல்வர், 2011-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்புதான் மதுரை மண்ணை தைரியமாக மிதித்தார் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்யும்போதெல்லாம் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும். காவல் துறையில் அரசியல் குறுக்கீடு இல்லை; சாதி, மத மோதல்கள் இல்லை; அதிகாரிகள் மிரட்டப்படுவது இல்லை; எனவே, சாதாரண முட்டுச் சந்து முதல், வெளிநாட்டு முதலீட்டுடன் வியாபாரம் செய்யும் அனைத்துத் தொழில் முனைவோர்களும் எந்தவித அச்சமுமின்றி தங்கள் தொழிலை செய்து வந்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான ஆட்சியிலும், 2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம், இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பெரிய மாநிலங்களில் முதலிடத்தை தமிழகம் பெற்றது. பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த முதல் பெருநகரம் என்ற பெருமையை சென்னையும், மற்ற இடங்களை தமிழகத்தின் இதர நகரங்களும் பெற்றன.
» ‘விலங்கு’ வெப் சீரிஸின் 2-வது சீசன் தயாராகிறது: நடிகர் விமல் தகவல்
» சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக விரைவில் கூடுதலாக 41 எஸ்கலேட்டர்கள்
இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழகத்தில் தற்போது நடப்பது மக்கள் ஆட்சியா? ஜார் மன்னன் ஆட்சியா? என்று தெரியாத அளவுக்கு அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளால் அனைவரும் உறைந்து போயுள்ளனர். ஆளும் திமுகவினரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
15.3.2023 அன்று, அரசின் மூத்த அமைச்சருக்கும், ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவருக்கும் இடையே யார் பெரியவர் என்ற ஈகோ யுத்தத்தில், ஆளும் திமுக நிர்வாகிகள் திருச்சி கண்டோன்ட்மெண்ட் காவல் நிலையத்திற்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட அமைச்சரின் அடியாட்கள், காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களைத் தடுத்த பெண் காவலரையும் தாக்கி உள்ளனர். அந்தத் தாக்குதலில் பெண் காவலரின் கை முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக செய்திகள் வருகின்றன.
உட்கட்சி மோதலில் காவல் நிலையத்தின் மீதே தாக்குதல் நடத்தியவர்களை காவல் துறை உடனடியாகக் கைது செய்யாமல் அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டு,ஆற அமர இருபிரிவினரிடமும் புகார் மனுக்களைப் பெற்று, மேலிடத்தின் அனுமதியைப் பெற்று மெதுவாக முதல் தகவல் அறிக்கை தயார் செய்துள்ளதைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுகிறது.
தன் சொந்தக் கட்சிக்காரர்களையும், அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் கையறு நிலையில் உள்ள ஒரு முதல்வரை இப்போதுதான் தமிழகம் முதன்முதலாகப் பார்க்கிறது. மேலும், ஒரு அமைச்சருக்கு அவரது கட்சிக்காரர்களே கருப்புக் கொடி காட்டுவதும், ஆளும் திமுகவின் உள்ளாட்சி மேயர்கள் மற்றும் தலைவர்கள் மீதே உள்ளாட்சி மன்றங்களில் ஆளும் திமுக கவுன்சிலர்களே புகார் கூறுவதும், தமிழகம் முழுவதும் நடைபெறுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காவல் துறையை தன் கைவசம் வைத்துள்ள இந்த அரசின் முதல்வர், காவல் நிலையத்தைத் தாக்கியவர்களை அடக்கி ஒடுக்காமல், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
மற்றொரு நிகழ்வாக, கடந்த 3-ந் தேதி இரவு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கடை வீதியில் இருக்கும் அரசு டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் அர்ச்சுனன் என்பவர் கடையை மூடுவதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீயை பற்றவைத்து ஒருவன் அந்த டாஸ்மாக் கடையின் மீது தூக்கி வீசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், கடையில் இருந்த விற்பனையாளர்அர்ச்சுனன் தீ காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மணரமடைந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தொழில் நடத்துபவர்களை ஆளுங்கட்சி நிர்வாகிகளும், சமூக விரோதிகளும் மிரட்டுவது தொடர்கதையாக உள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நேரடியாக தொழிற்சாலைக்குச் சென்று மிரட்டுவது முதல், அரசு நிறுவனமான டாஸ்மாக் கடைகளையும், நியாய விலைக் கடைகளையும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும், சமூக விரோதிகளும் தாக்குவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையைக் கண்டு தமிழக மக்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.
இன்று (16.3.2023) கூட, சமூக ஊடகங்களில், ராணிப்பேட்டை மாவட்டத்தில்,அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலம் என்ற ஊரில், கஞ்சா போதையில் மாமுல் கேட்டு வரும் ரவுடிகளால் அச்சமடைந்துள்ள ஒரு கடைக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தனது கடையின் கதவுகளில் கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளால், இந்தக் கடை காலவரையறையின்றி மூடப்படுகிறது என்று எழுதப்பட்ட ஒரு காகித்தை ஒட்டி கடையை மூடி வைத்துள்ளார்.
இந்த திமுக அரசில் ஒவ்வொரு செயல்பாடும் புரியாத மர்மமாக உள்ளது. தலைமையின் கட்டுப்பாட்டில் கட்சியினர் இல்லை. ஆட்சியாளரின் கட்டுப்பாட்டில் அதிகார வர்க்கம் இல்லை. அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் அரசு ஊழியர்கள் இல்லை. மக்களைக் காக்க வேண்டிய காவல் துறையினர் தங்களைக் காத்துக்கொள்ள முடியாமல் அல்லல்படுகிறார்கள். பெண் காவலர்கள் திமுக நிர்வாகிகளால்பொது வெளியிலும், காவல் நிலையத்திலும் தாக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல், ஆளும் திமுக நிர்வாகிகளின் அராஜகம்போன்றவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்த வேண்டும் என்று இந்த நிர்வாகத் திறனற்ற அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இந்த ஆட்சியாளர்களால் தினமும் பாதிக்கப்படும் காவலர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆட்சிக்கு எதிராக திரண்டெழுவார்கள் என்பதை இந்த ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம்" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago