மதுரை - விருதுநகர் நிர்வாகம் இணைந்து சதுரகிரியில் ஒருங்கிணைந்த அலுவலகம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை

By அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இணைந்து காவல் துறை, சுகாதாரத் துறை, வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த அலுவலகம் அமைக்க வேண்டும் என இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5500 அடி உயரத்தில் சதுரகிரி கோயிலை சுற்றியுள்ள 75.76 ஏக்கர் நிலப்பகுதி கோயிலுக்கு சொந்தமானது ஆகும். கோயில் அமைந்துள்ள வனப்பகுதி மதுரை மாவட்டம் சாப்டூர் பீட் பகுதியில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்லும் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. இதனால் தாணிப்பாறை நுழைவு வாயில் வரை விருதுநகர் மாவட்ட அதிகாரிகளும், வனப்பகுதியில் மதுரை மாவட்ட வனத்துறை, போலீஸ், சுகாதாரத்துறை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

சதுரகிரி கோயிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என மாதம் தோறும் 9 நாட்கள் வரை அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பிரதோஷ நாட்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் மலையேறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி உள்ளிட்ட விழா நாட்களில் 50 ஆயிரத்திற்கும் அதிமான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆண்டுக்கு பல லட்சம் மக்கள் வந்து செல்லும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தாணிப்பாறை நுழைவு வாயிலுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. அதேபோல் வனப்பகுதியில் ஏதாவது நடந்தால் விருதுநகர் மாவட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் பக்தர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதை தவிர்க்க மதுரை, விருதுநகர் மாவட்ட சுகாதாரத் துறை, வனத் துறை, காவல் துறை இணைந்து ஒருங்கிணைந்த அலுவலகம் அமைப்பதற்கு இரு மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் அலைக்கழிப்பு: சதுரகிரி மலையேறும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் இறந்தவரின் உடலை 10 கி.மீ தூரத்தில் இருக்கும் வத்திராயிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் 60 கி.மீ தூரத்தில் இருக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். சாப்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகின்றனர். இதனால் பக்தர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மருத்துவ முகாமால் பலனில்லை: வழிபாட்டிற்கு அனுமதித்த நாட்களில் காலை 6 மணி முதலே பக்தர்கள் மலையேற தொடங்கி விடுவர். மதுரையில் இருந்து சுகாதாரக் குழு வருவதற்கு 9 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. அதற்குள் 80 சதவீத பக்தர்கள் மலையேறி சென்று விடுகின்றனர். மேலும் மருத்துவ குழுவினர் அடிவாரத்தில் மட்டுமே இருக்கின்றனர். இதனால் மலையேறுபவர்களுக்கு ஏதாவது உடல் பிரச்சினை ஏற்பட்டால் பக்தர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE