“நான் பேச நிறைய இருந்தாலும், மனச்சோர்வால் பேசும் நிலையில் இல்லை” - திருச்சி சிவா

By செய்திப்பிரிவு

திருச்சி: “நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், நான் பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகுந்த மனச்சோர்வில் உள்ளேன்” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார்.

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நேற்று எம்.பி. திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், அமைச்சருக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தும் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில். திருச்சி சிவா இன்று (மார்ச் 16) டெல்லியில் இருந்து திருச்சி வந்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடந்தவற்றை நான் ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்துகொண்டேன். இப்போது நான் எதையும் பேசும் மன நிலையில் இல்லை. கடந்த காலத்திலும் சோதனைகளை சந்தித்து உள்ளேன். அடிப்படையில் நான் முழுமையான, அழுத்தமான கட்சிக்காரன்.

என்னை விட எனக்கு கட்சிதான் முக்கியம் என்ற காரணத்தால் பலவற்றை நான் பெரிதுபடுத்தவில்லை. யாரிடமும் புகார் கூறவில்லை. தனி மனிதனைவிட இயக்கம் பெரியது என்ற தத்துவத்தில் வளர்ந்தவன் நான். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகுந்த மன வேதனையை தந்துள்ளது. வீட்டில் உள்ள உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நான் இப்போது எதையும் பேசும் மனநிலையில் இல்லை.

நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால். நான் பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகுந்த மனச்சோர்வில் உள்ளேன். நான் விரைவில் உங்களிடம் பேசுகிறேன். எல்லாவற்றையும் கூறுகிறேன். விரைவில் கூறுகிறேன்" என்று அவர் கூறினார்.

நடந்தது என்ன? - திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேட் ஆபீசர்ஸ் காலனியில் மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.31 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை திறந்து வைப்பதற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் ஸ்டேட் பேங்க் ஆபீசர்ஸ் காலனிக்கு காரில் வந்தனர்.

அப்போது அதே பகுதியில் வசிக்கும் எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டருகே 10-க்கும் மேற்பட்டோர் கூடி நிற்பதைக் கண்ட அமைச்சர் கே.என்.நேரு, வரவேற்பு அளிப்பதாகக் கருதி காரிலிருந்து கீழேஇறங்கினார். அப்போது திருச்சி சிவா ஆதரவாளர்கள் திடீரென கருப்புக் கொடியை காட்டி அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் காரில் ஏறி அமர்ந்து, என்ன பிரச்சினை எனக் கேட்டார். அப்போது, திறப்பு விழா கல்வெட்டில் சிவா எம்.பி பெயர் போடாதது ஏன்? அவருக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? என சிவாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அமைச்சர் கே.என்.நேரு அங்கிருந்து காரில் சென்று, இறகுப்பந்து மைதானத்தைத் திறந்து வைத்தார்.

இதற்கிடையே, அமைச்சர் கே.என்.நேருக்கு கருப்புக் கொடி காட்டியதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்களான ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி தலைமையில் கவுன்சிலர்கள் முத்துசெல்வம், காஜாமலை விஜய், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் திடீரென திருச்சி சிவாவின் வீட்டுக்கு வந்து வெளியிலிருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசினர். பின்னர் கதவைத் திறந்து உள்ளே புகுந்து சோடா பாட்டில், கற்கள், மூங்கில் கம்புகளால் திருச்சி சிவாவின் கார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், வீட்டின் காம்பவுன்ட் சுவரிலிருந்த அலங்கார விளக்குகளை அடித்து உடைத்தனர்.

இதைக்கண்ட போலீஸார் அங்குவந்து எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் கே.என்.நேரு அந்த வழியாக மீண்டும் வந்தார்.

திமுகவினரும் அவரைப் பின்தொடர்ந்து சென்றுவிட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 10 பேரை போலீஸார் கைது செய்து செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் தங்க வைத்திருந்தனர். அப்போது அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை தாக்கினர். இதுதொடர்பாக திமுக நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்