சென்னை: கடலூரை பாலைவனமாக்கி வரும் என்எல்சிக்கு எதிரான போராட்டத்ததில் பாமக ஒருபோதும் பின் வாங்காது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களும், விரைவில் செயல்படுத்தப்படவிருக்கும் அவற்றின் விரிவாக்கங்களும் கடலூர் மாவட்டத்தின் அழிவுக்கு வழிகோலிக்கொண்டிருக்கும் நிலையில், மேலும் இரு நிலக்கரித் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மொத்தம் 66,000 ஏக்கர் பரப்பளவிலான அந்த நிலக்கரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மாவட்டம் அழிந்துவிடும்.
மத்திய அரசு புதிதாக செயல்படுத்தத் துடிக்கும் இரு நிலக்கரித் திட்டங்களில் முதன்மையானது சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், இரண்டாவது... வீராணம் நிலக்கரித் திட்டம் மற்றும் பாளையம் கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகும். இந்த இரண்டாவது திட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் வட்டங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 45,000 ஏக்கரில் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. இது குறித்த விவரங்களை கடந்த 29.01.2023-ம் நாள் வெளியிட்ட அறிக்கையில் விரிவாக விளக்கியிருந்தேன். அத்துடன் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; இத்திட்டம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக அளிக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.
மற்றொரு திட்டமான சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம் (East of Sethiathope Lignite Block) குறித்த விவரங்கள் இப்போது தான் வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் உள்ள அம்பாபுரம், பின்னலூர், மஞ்சக்கொல்லை, தலைக்குளம், நத்தமேடு, வடக்குத்திட்டை, தெற்குத் திட்டை, கிருஷ்ணாபுரம், வண்டுராயன்பட்டு, பூதவராயன்பேட்டை உள்ளிட்ட 20 கிராமங்களில் 21,000 ஏக்கர் பரப்பளவில் இது செயல்படுத்தப்படவுள்ளது. 84.41 சதுர கி.மீ பரப்பளவில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திலிருந்து ஆண்டுக்கு பல லட்சம் டன் நிலக்கரி கிடைக்கும். இத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய இடங்களிலும் இரு நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இந்த விவரங்களை மக்களவையில் நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷியே உறுதி செய்திருக்கிறார்.
சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்குமான ஆய்வுப் பணிகள் ஏற்கனவே ஓரளவு முடிவடைந்து விட்டன. இந்த 3 திட்டங்களும் தனியார் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த மூன்று சுரங்கங்களுக்கான ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் இந்த ஏலத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், அவற்றை ஏலத்தில் எடுப்பதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை. எனினும், எந்த நேரமும் ஏதேனும் ஓர் நிறுவனம் இவற்றை ஏலத்தில் எடுத்து, நிலக்கரி சுரங்கங்களை அமைக்கும் பணிகளைத் தொடங்கினால், அன்று முதல் கடலூர் மாவட்டத்தின் அழிவு வேகம் அதிகரிக்கத் தொடங்கி விடும்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகிறது. பா.ம.க. எதற்காக இவ்வளவு தீவிரமாக போராட்டங்களை முன்னெடுக்கிறது? என்பதை பலரும் புரிந்துகொள்ளவில்லை. நிலக்கரி சுரங்க விரிவாக்கம் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், கடலூர் மாவட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. நிலக்கரி சுரங்கங்களால் கடலூர் மாவட்டம் எத்தகைய பாதிப்புகளை சந்திக்கும் என்பதை விளக்குகிறேன்.
என்.எல்.சி சுரங்க விரிவாக்கம் மற்றும் மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தவுள்ள நிலத்தின் பரப்பு 25,000 ஏக்கர். இத்துடன் சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டத்திற்காக 21,000 ஏக்கர், வீராணம் நிலக்கரித் திட்டம் மற்றும் பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டத்திற்காக 45,000 ஏக்கர் என மொத்தம் 91,000 ஏக்கர் பரப்பளவில் அடுத்த சில ஆண்டுகளில் புதிய சுரங்கங்கள் அமைக்கப்பட்டு நிலக்கரி எடுக்கப்படும். நிலக்கரியை பயன்படுத்த புதிய அனல் மின்நிலையங்கள் அமைக்கப்படக்கூடும்.
என்.எல்.சி நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரையிலான 66 ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்த, பயன்பாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களின் மொத்தப்பரப்பு 37,256 ஏக்கர் மட்டும் தான். ஆனால், இந்தப் பரப்பிலிருந்து நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக கடலூர் மாவட்டம் வாழத்தகுதியற்ற மாவட்டமாக மாறிவிட்டது. நிலக்கரி சுரங்கங்களால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.
37,256 ஏக்கரில் நிலக்கரி எடுக்கப்பட்டதன் விளைவாக கடலூர் மாவட்டம் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்கு சென்று விட்ட நிலையில், அதைவிட கிட்டத்தட்ட 3 மடங்கான 91,000 ஏக்கரில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் கடலூர் மாவட்டம் என்னவாகும்? என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. என்.எல்.சியும், தனியாரும் போட்டிப்போட்டுக் கொண்டு பூமியை பிளந்து நிலக்கரி வளத்தைக் கொள்ளையடித்தால் கடலூர் மாவட்டம் வெகுவிரைவில் அழிந்து விடும். ஆனால், தமிழக அரசுக்கு அத்தகைய பதற்றமும், கவலையும் கிஞ்சிற்றும் இல்லை. அதனால் தான் கடலூர் மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நிலக்கரி வளத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வு நடத்த அனுமதி கோரப்பட்டால், கண்களை மூடிக் கொண்டு அனுமதி வழங்கிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து எந்தக் கவலையும்படாமல் அவர்களின் நிலங்களை பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பேரழிவுக்கு தமிழக அரசும் துணை போய்க்கொண்டிருக்கிறது.
என்.எல்.சியாலும், பிற தனியார் நிறுவனங்களின் நிலக்கரி சுரங்களினாலும் கடலூர் மாவட்டத்திற்கு மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்ததால் தான் என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறேன். பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டிருப்பது மக்களைக் காப்பதற்கான போராட்டம் என்பதை தமிழக அரசு இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்; அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்காக ஓர் அடி நிலத்தைக் கூட கையகப்படுத்தித் தர மாட்டோம் என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். அத்துடன் என்.எல்.சி நிறுவனத்தை தமிழகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக போராட்டங்களைத் தொடங்கியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்காது. கடலூர் மாவட்ட மக்களையும், மண்ணையும் காப்பதற்கான போரில் எந்த எல்லைக்கும் செல்லவும், எத்தகைய தியாகத்தைச் செய்யவும் பாட்டாளி மக்கள் கட்சி தயங்காது. என்.எல்.சி இல்லாத கடலூர் மாவட்டம் தான் பா.ம.க.வின் நோக்கம். அதை பா.ம.க. அடைந்தே தீரும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago