திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திமுக எம்.பி திருச்சி சிவா வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. கருப்புக் கொடி காட்டியவர்களை கைது செய்து வைத்திருந்தபோது காவல் நிலையத்துக்குள் புகுந்து அவர்களைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேட் ஆபிசர்ஸ் காலனியில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பியின் வீடு உள்ளது. இப்பகுதியில் திருச்சி மாநகராட்சியால் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.31 லட்சம் செலவில் நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு, பதாகைகளில் அதே பகுதியில் வசிக்கக்கூடிய எம்பி திருச்சி சிவாவின் பெயர், படம் இடம்பெறவில்லை. மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
கே.என்.நேருவிடம் முறையீடு: இதற்கிடையே, திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு, மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் புதன்கிழமை காலை ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் காலனிக்கு காரில் வந்தனர். எம்.பி திருச்சி சிவா வீட்டருகே 10-க்கும் மேற்பட்டோர் கூடி நிற்பதைக்கண்ட அமைச்சர் கே.என்.நேரு, வரவேற்பு அளிப்பதாக கருதி காரிலிருந்து கீழே இறங்கினார். அப்போது, திருச்சி சிவா ஆதரவாளர்கள் திடீரென கருப்புக் கொடியை எடுத்துக்காட்டி அமைச்சருக்கு எதிரான முழக்கமிட்டனர். இதைக்கண்ட அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் காரில் ஏறி அமர்ந்து, என்ன பிரச்சினை எனக் கேட்டார். அப்போது, கல்வெட்டில் எம்.பி பெயர் போடாதது ஏன், அவரை அழைக்காதது ஏன் என சிவாவின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு முனுமுனுத்தபடி அங்கிருந்து காரில் சென்று, நவீன இறகுப்பந்து மைதானத்தைத் திறந்து வைத்தார்.
» தெலுங்கு சினிமாவில் வில்லனாக நடிகர் ஜோஜு ஜார்ஜ் அறிமுகம்
» இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் 100 சிசி மோட்டார் சைக்கிள் அறிமுகம்!
எம்எல்ஏ தலைமையில் தாக்குதல்: இதற்கிடையே ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி தலைமையில் கவுன்சிலர்கள் முத்துசெல்வம், காஜாமலை விஜய், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் திடீரென திருச்சி சிவாவின் வீட்டுக்கு வந்து வெளியிலிருந்து நாற்காலிகளைத் தூக்கி வீசினர். பின்னர் கதவைத் திறந்து உள்ளே புகுந்து சோடா பாட்டில், கற்கள், மூங்கில் கம்புகளால் திருச்சி சிவாவின் கார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், வீட்டின் காம்பவுன்ட் சுவரிலிருந்த அலங்கார விளக்குகளை அடித்து உடைத்தனர்.
இதைக்கண்ட போலீஸார் அங்குவந்து எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் கே.என்.நேரு அந்த வழியாக மீண்டும் வந்தார். திமுகவினரும் அவரைப் பின்தொடர்ந்து சென்றுவிட்ட நிலையில், அமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 10 பேரை போலீஸார் அழைத்துச் சென்று செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் தங்க வைத்திருந்தனர்.
காவல் நிலையத்திலும் தாக்குதல்: இத்தகவலறிந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களான கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ், ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் அந்த காவல்நிலையத்துக்குச் சென்று உள்ளே நுழைய முயற்சித்தனர். அங்கு பணியிலிருந்த காவலர் சாந்தி என்பவர் அவர்களைத் தடுத்தார். எனினும், அவரை கீழே தள்ளிவிட்டுவிட்டு உள்ளே புகுந்த நபர்கள் அங்கிருந்த நாற்காலிகளால் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதில் திருச்சி சிவா ஆதரவாளரான சரவணன் என்பவருக்கு காயம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுகவினர் தள்ளிவிட்டதில் காவலர் சாந்திக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையறிந்த காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி அங்கு விரைந்து நடந்த சம்பவங்களை விசாரித்தார். சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தார்.
பலத்த பாதுகாப்பு: இந்தச் சூழலில் கவுன்சிலர் புஷ்பராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திருச்சி சிவா வீடு அமைந்துள்ள பகுதிக்கு வந்தனர். இதைக்கண்ட உதவி ஆணையர்கள் கென்னடி, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அங்குசென்று அவர்களை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர். அதைத்தொடர்ந்து திருச்சி சிவா எம்.பி வீடு, அவரது ஆதரவாளர்கள் வைக்கப்பட்டிருந்த செசன்ஸ் கோர்ட் காவல் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமைச்சர் கே.என்.நேருவை வழிமறித்து வாக்குவாதம் செய்தது குறித்து கேட்கச் சென்றபோது திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் தங்களைத் தாக்கியதாக அமைச்சர் நேரு தரப்பில், செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எம்.பி திருச்சி சிவா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பஹ்ரைன் சென்றுள்ள நிலையில், அவரது தரப்பிலிருந்து யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியது குறித்து திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து காவல் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திமுகவினர் 4 பேர் சஸ்பெண்ட்: இந்நிலையில், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டிய விவகாரத்தில், திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நேருவின் ஆதரவாளர்கள் 4 பேரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
5 பேர் கைது: திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக சப் இன்ஸ்பெக்டர் மோகன் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 143, 147, 447, 294 (பி), 323, 353, 332, 452, 427, 506 (2) ஆகிய பிரிவுகளின்கீழ் கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், பொன்னகர் பகுதி பிரதிநிதி திருப்பதி மற்றும் சிலர் மீது செசன்ஸ் கோர்ட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் திருப்பதியை போலீஸார் பெரியமிளகுபாறை பகுதியில் மடக்கிப் பிடித்தனர். காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், துரைராஜ் ஆகியோர் புதன்கிழமை மாலை கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர் இவ்வழக்கில் 5 பேரையும் கைது செய்தனர்.
வீடியோவுடன் இபிஎஸ் கேள்வி: "தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். > விரிவாக வாசிக்க > திருச்சியில் காவல் நிலையத்துக்குள் திமுகவினர் தாக்குதல்: ஸ்டாலின் பதில் என்ன? - வீடியோவுடன் இபிஎஸ் கேள்வி
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago