“சில திட்டங்களில் தேக்க நிலை... அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்க வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: சில திட்டங்களில், பணி நிறைவு பெறுவதில் தேக்க நிலை காணப்படுவதாகவும், அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்கவேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் முன்னுரிமைத் திட்டங்கள் (Priority Schemes) தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 3 நாட்களாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் இறுதி நாளான இன்று (பிப்.15) மு.க. ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். அதில் முதல்வர் பேசுகையில், “இன்றைய ஆய்வுக் கூட்டமானது, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மாநில மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு முக்கியமான திட்டங்களை அறிவித்து, அவற்றை நாம் செயல்படுத்தி வருகிறோம். அவற்றில் உங்களது ஈடுபாடும், பங்களிப்பும் பாராட்டுக்குரியது. அதே சமயம், புதிய திட்டங்கள் ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை நிறைவு செய்வதில்தான் நம்முடைய திறமை இருக்கிறது.

இன்றைய கூட்டத்தில் சில குறிப்பிட்ட துறைகளில், சில திட்டங்களில், பணி நிறைவு பெறுவதில் தேக்க நிலை காணப்படுவது குறித்துப் பேசி இருக்கிறோம். அதற்கான காரணங்களை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது உங்களது முக்கிய கடமையாகும். எந்தத் துறையின் திட்டமாக இருந்தாலும், அது மக்களை மேம்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

சமூகப் பொருளாதாரக் குறியீட்டில், தமிழ்நாடு தேசிய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் தலைசிறந்து விளங்கும் வகையில் இந்தத் திட்டங்களைத் தீட்டி வருகிறோம். இன்றைய தேவைகளுக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தை மனதில் கொண்டும் இவை அமைந்துள்ளன. அரசின் ஒவ்வொரு துறையும் ஒரு குறிப்பிட்ட இலக்கோடு, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஏற்றத் தாழ்வற்ற வாழ்க்கை முறையை அமைப்பதற்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

இந்தத் திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்தினால், நிச்சயமாக நமது மாநிலம் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் ஒளிரக்கூடிய வகையில் அமையும். எந்தத் திட்டமாக இருந்தாலும், அந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது இருக்கிற ஆர்வம், அதனை நிறைவேற்றி முடிப்பது வரை இருக்க வேண்டும். அதற்குத்தான் இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

மக்களைச் சென்றடையும் திட்டங்களை “முத்திரைத் திட்டங்கள்” என துறைவாரியாகத் தொகுத்து, அவற்றின் முன்னேற்றத்தையும் கடந்த மாதம் உங்களுடன் விவாதித்தேன். தலைமைச் செயலகத்தோடு ஆய்வுகளை நிறுத்திக் கொள்ளாமல், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற பயணத்தையும் மேற்கொண்டு வருகிறேன். இந்த ஆய்வுகளின்போது, அரசின் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் பொதுவான நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும், சில நிகழ்வுகளில், கள அளவில் இன்னும் கவனம் தேவை என்பதை அறிய முடிந்தது. மக்கள் என்னிடம் நேரடியாக அளிக்கும் மனுக்களிலும் அத்தகைய எதிர்பார்ப்பை அறிய முடிந்தது.

அதனால்தான் முன்னுரிமைத் திட்டங்கள் என்ற வகையில் தற்போது செயல்பாட்டில் உள்ள மிக முக்கியமான திட்டங்களைத் துறைவாரியாகத் தொகுத்து, அவற்றின் தற்போதைய முன்னேற்றத்தை அறியும்நோக்கில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிறந்த மேலாண்மைக்கு அடையாளமாக, ‘What gets measured, gets done’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள், திட்டங்களின் வெற்றிக்கும், மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும்.

மேலும், அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவும் இதுபோன்ற கூட்டங்கள் உதவும் என நான் நம்புகிறேன். அரசுச் செயலாளர்களைப் பொறுத்தவரையில், உங்களது துறை அலுவலர்களின் பணியினை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், மாதந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் மக்களைச் சந்திக்க வேண்டும். உண்மைகளை அறிய வேண்டும். அப்போதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கமானது முழுமையடையும்.

நமக்கு மட்டும் மிகச்சிறந்த நோக்கங்கள் இருந்தால் போதாது. அவை திட்டங்களைச் செயல்படுத்தும் அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்படும்போதுதான், அந்தத் திட்டங்களின் நோக்கமும் நிறைவேறும்; பயனும் முழுமையாக மக்களுக்குக் கிடைக்கும். அதனை நீங்கள் கவனத்தில் கொண்டு பணியாற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்