ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் நல்ல நேரம் வந்துவிட்டது: அமைச்சர் தங்கம் தென்னரசு

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்குவதற்கான நல்ல நேரம் வந்துவிட்டது. அதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்” என சிவகாசியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்று மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் செந்தில் குமார் வரவேற்றார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்று மற்றும் ரூ.1 கோடிக்கு புதிய கடன்கள் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: “பழங்காலத்தில் பெண்கள் கடல் கடந்து செல்லும் வழக்கம் இல்லை. ஆனால், இன்று பெண்கள் தடைகளைத் தாண்டி விண்வெளிக்கு செல்கின்றனர்.

பெண்களை ஒதுக்கிய சமுதாயத்தில் அவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் உள்ளாட்சி பதவிகளில் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா பேருந்து சேவை, சுயஉதவி குழு கடன் தள்ளுபடி, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை என்பவை இலவசம் அல்ல அது பெண்களின் உரிமை.

தமிழகத்தில் உயர் கல்வியில் சேர்வோர் எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்து இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது. அதில் ஆண்களை விட பெண்களே அதிகம். தொழில் துறை அமைச்சகம் சார்பில் மென்பொருள் துறை உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களிலும் நடத்திய ஆய்வில் உயர் பதவிகளுக்கான தகுதி படைத்தவர்களாக ஆண்களை புறந்தள்ளி பெண்கள் முன்னேறி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

பெரியார், அண்ணா, கலைஞர் வலியுறுத்திய பெண் விடுதலையை உண்மையாக்குவதற்காக அவர்களுக்கு பல்வேறு உரிமைகளை முதல்வர் வழங்கி வருகிறார். அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்கும் நல்ல நேரம் வந்து விட்டது. அதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்” இவ்வாறு அவர் பேசினார். சிவகாசி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி, துணை தலைவர் விவேகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE