அரசு மருத்துவருக்கு குற்ற குறிப்பாணை அனுப்பியதை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதால் கைதான ஏபிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்தித்ததற்காக, அனுப்பப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று, முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவரான டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார்.

மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி, சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதேசமயம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை சார்பில் அவருக்கு குற்ற குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி டாக்டர் சுப்பையா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பையா தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஏபிவிபி அமைப்பின் மாணவர் சங்கத்தின் தலைவராக 2017 முதல் 2020ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளதாகவும், அது ஓர் அரசியல் இயக்கம் இல்லை என்றும் வாதிட்டார். மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் குற்ற குறிப்பாணை அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE