பழனிசாமி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரையில் நேற்று மூன்று மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில், ‘‘முன்னாள் முதல்வருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை’’ என்று குற்றம் சாட்டினர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி இரண்டு நாட்களுக்கு முன் சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சிக்கு விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமமுக பிரமகர் ராஜேஷ்வரன் என்பவர், பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார். அவரை பழனிசாமியின் பாதுகாவலர்கள் பிடித்து மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படை வசம் ஒப்படைத்தார். அவர் தன்னை பழனிசாமியுடன் வந்தவர்கள் தாக்கியதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அதே நேரத்தில் அதிமுகவினர் அந்த நபர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் மதுரையின் மூன்று மாவட்டங்கள் சார்பில் திமுக அரசை கண்டித்தும், பழனிசாமி மீது போட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று பழங்காநத்தத்தில் மதுரை மாநகரம், மதுரை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை வகித்தனர்.
பொய் வழக்கு போட்டதாக திமுக அரசை கண்டித்தும், பழனிசாமி மீது போட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர் கோஷமிட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதை பொறுக்க முடியாத திமுக அரசு, ஒரு கோடியே 49 லட்சம் வாக்குகளை பெற்று எதிர்கட்சி தலைவராக இருக்கும் பழனிசாமி பங்கேற்ற சிவகங்கையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அனுமதி மறுக்கிறது. பிறகு நீதிமன்றத்தை நாடி நாங்கள் அனுமதி பெற்றோம். ஆனால், அதே திமுக அரசு, நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற திமுகவின் ‘பி’ டீமாக இருப்பவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் அனுமதி வழங்குகிறது. மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதை யாரும் செய்ய மாட்டார்கள். காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிட்டது. விமான நிலையத்தில், உள்நோக்கத்துடன் ஒருவர் பண்பாடு அற்ற, நாகரிகம் அற்ற முறையில், கே.பழனிசாமியை பேசி உள்ளார். அவருடன் வந்த பாதுகாவலர் தடுத்து நிறுத்தி, அந்த குற்றவாளியை வெளியே வரும்போது, விமான நிலைய அதிகாரிடம் ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு நாங்கள் கொடுத்தோம். ஆனால் அந்த புகாரை கிடப்பில் போட்டு, வீடியோ மூலம் விமர்சனம் செய்த அந்த நபர் மனுவை வைத்துக்கொண்டு, பழனிசாமி மீது பொய்யான வழக்கை பதிவு செய்து சர்வாதிகார ஆட்சி போல இந்த அரசு உள்ளது.

இந்த சர்வாதிகாரம் நீடிக்குமானால் மதுரை அதிமுக தொண்டர்கள், மனித வெடிகுண்டாக மாறி, அதிமுகவிற்கு பாதுகாப்பாக மாறுவார்கள். திமுக ஆட்சியில், தன் மீது கத்தியை ஒருவர் வீசினார் என்று, பொய்யான தகவலை மத்திய அரசிடம் கூறி பாதுகாப்பு கேட்டவர் தான் ஸ்டாலின். ஸ்டாலின் துணை முதலமைச்சராக திமுக ஆட்சியில் இருந்த போதே, அவரால் இந்த மதுரைக்கு நுழைய முடியவில்லை. அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சி வந்தபிறகுதான் அவரால் மதுரைக்கு வர முடிந்தது.

ஆர்கே நகர் சென்றாலும் வழக்கு, சிவகங்கை சென்றாலும் வழக்கு, விமான நிலையம் சென்றாலும் வழக்கு, சாலை மார்க்கம் சென்றாலும் வழக்கு என்று வழக்குகளை திமுக அரசு திட்டமிட்டு தொடுத்து வருகிறது. பொதுமக்களை பழனிசாமி சந்தித்தால், எழுச்சி பெற்று விடுவாரோ என்று நினைக்கின்றனர்.

அதனால், ஸ்டாலின் இன்று இடி அமீன் போல, ஹிட்லர் போல, முசோனி போல சர்வாதிகாரிகளின் அவதாரமாக இருக்கிறார். பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களைதான் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதே மண்ணில் திமுக ஆட்சியில் சர்வாதிகாரத்தின் உச்சமாக இருந்த ஒருவரை மதுரை மக்கள் வீழ்த்தினார்கள். அதுபோல், அடுத்த நீங்கள் வீழும் காலமும் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது. அதிமுகவின் எழுச்சியை திமுக அரசு அடக்கி ஒடுக்கி விடலாம் என நினைக்கிறது. திமுக ஆட்சியை வீழ்த்தும் வரை அதிமுக தொண்டர்களுக்கு உறக்கமும், ஓய்வும் இல்லை. கே.பழனிசாமி மீது வழக்கு தொடுத்த ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் திரண்டுள்ளார்கள். இந்த கூட்டம் இன்றைக்கு வெறும் ட்ரெய்லர் தான். இதே நிலை தொடருமானால் மதுரை தொண்டர்கள் ஜெயிலுக்குப் போகவும் தயங்காதவர்கள். திமுகவின் சர்வாதிகார அடக்குமுறையை சந்திக்க தயாராக இருக்கிறோம். திமுக தலைவர் ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார். பழனிசாமி மீது தொடுத்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். பெறாவிட்டால் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து மதுரையில் நடக்கும். அது திமுக ஆட்சியை பெரும் நெருக்கடியை கொடுக்கக்கூடியதாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்