“சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் என்பது பிரமாண்ட அறிவிப்பு” - புதுச்சேரி பட்ஜெட்டுக்கு தமிழிசை பாராட்டு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் வெளியிடப்பட்டிருப்பது பிரமாண்டமான அறிவிப்பு என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டியுள்ளார்.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கள விளம்பரப் பிரிவு புதுச்சேரி சார்பில் "பெண்கள் உரிமைகளும் பாலின சமத்துவமும்" கண்காட்சி புஸ்ஸி வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அனைவராலும் அறியப்படாத சுதந்திரப் போராட வீராங்கனைகள் பற்றிய படக் காட்சிகளையும், அரங்குகளையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது: “மத்திய பட்ஜெட்டில் பிரதமர் பல திட்டங்களை அறிவித்துள்ளார். 30 கோடி பேர் முத்ரா வங்கி திட்டத்தினால் பலன்பெற்றுள்ளனர். 40 கோடி பேருக்கு மேல் பெண்கள் பெயரில் ஜன்தன் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பெண்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்திருக்கிறார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியமாக வழங்கப்படும் என்பது பிரமாண்டமான அறிவிப்பு. பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடன் ரூ.50 ஆயிரம் 18 வயது வரை நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என்பதும் இந்தியாவில் முதல் முறை. மேலும் புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்பதும் மிக்க மகி்ழ்ச்சியான அறிவிப்பு. இதற்காக முதல்வருக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய காலத்தில் பெண்களை பற்றி பல விஷயங்களை பேசிவிட்டோம். ஆனால் என்னை பொறுத்தவரையில் பெண்கள் முதலில் தனக்குள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு உதவி செய்கிறது. சமூதாயம் ஆதரவு தருகிறது. ஆனால் ஏன் இன்னும் தற்கொலைகள் நடக்கிறது.

ஏன் பெண் குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இன்றைக்கு நாமெல்லாம் பெண்ணாக பிறந்திருப்பதற்கு பெருமை அடைகிறேன் என்ற மாபெரும் எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். கண்ணீர் என்பது பெண் இனத்துக்கானது அல்ல. அதனால் தைரியமாக எந்த சூழ்நிலை வந்தாலும் என்னால் சமாளிக்க முடியும் என்ற சூழலை கொண்டு வாருங்கள்.

அதிகாரத்தால் எதையும் கட்டுப்படுத்த முடியாது. அன்பினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஆகவே குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கரோனா காலத்தில் 2 ஆண்டுகள் ஆன்லைனில் அதிகமாக தொழில் செய்தது பெண்கள் தான். அவர்கள்தான் சவாலான நேரங்கள் வரும்போது முடங்கி கிடக்காமல் எழுந்து கற்றுக்கொள்வார்கள். தன்னம்பிக்கை தான் உலகில் மிகப்பிரமாண்டமான சொத்து” என்று அவர் பேசினார்.

மேலும், மருத்துவத் துறையில் பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர். நளினி பார்த்தசாரதி, மத்திய கலாச்சார அமைச்சகம், லலித் கலா அகாடமியின் பொதுக் குழு உறுப்பினர் மற்றும் தேசிய விருத்தாளர் மாலதி செல்வம், சித்த மருத்துவர் பாஸ்கர் மற்றும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பரிசுகளைப் பெற்ற மாணவிகளுக்கு ஆளுநர் விருதுகள் வழங்கி அவர் கவுரவித்தார்

இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தெற்கு மண்டல தலைமை இயக்குநர் வெங்கடேஸ்வர், சென்னை பத்திரிகை தகவல் தொடர்பு நிறுவனத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, சுகாதாரம், மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் சமூக நலத்துறைச் செயலர் உதயகுமார், புதுச்சேரி சிபிசி கள விளம்பரப் பிரிவின் துணை இயக்குநர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE