சென்னை குடிநீர் வாரியத்தின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகக் கட்டிடம் தரை மற்றும் ஆறு தளங்களைக் கொண்டதாகும். இக்கட்டடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து இருந்த நிலையில், பணியாளர்களும், அங்கு வருகை தரும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். அதோடு, ஆவணங்களை பராமரிப்பதிலும் சிரமம் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள 24 கோடியே 92 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவுபெற்றன.

இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட அவலுவலகக் கட்டிடம் மற்றும் புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.13) திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட இவ்வலுவலகக் கட்டிடத்தில், நவீன உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, மின்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டு, அலுவலகத்தின் ஆறு தளங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. ஆறாவது தளத்தில் 100 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு கூட்ட அரங்கும், முதலாவது தளத்தில் வாரியக் குழு கூட்ட அரங்கு மற்றும் 50 பேர் அமரக்கூடிய வகையில் ஒரு சிறிய கூட்ட அரங்கு ஆகியவை மையப்படுத்தப்பட்ட குளிர் சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அலுவலகப் பகுதி முழுவதும் தீயணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்: சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவித்து, நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புகார் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு 1 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் முதல்வரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இக்கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், 20” x 5” அளவிலான LED திரை நிறுவப்பட்டு, இத்திரையில் குடிநீர் வாரியத்தால் இயக்கப்பட்டுவரும் 40 நீரேற்று நிலையங்களில் லாரிகள் மூலம் நீர் நிரப்பப்படுவது, லாரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் வழங்கல் பணிகள், கழிவு நீரேற்று நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இம்மையத்தின் மூலம் கண்காணிக்கப்படும்.

மேலும், குடிநீர் வழங்கும் லாரிகளின் இயக்கம் மற்றும் கழிவு நீரகற்றும் ஜெட்ராடிங் இயந்திரங்களின் இயக்கங்கள் GPS முறையில் கண்காணிக்கப்படும். சென்னை குடிநீர் வாரிய நிலநீர் புவியியல் துறை சார்பாக சென்னைப் பெருநகரில் உள்ள 200 வார்டுகளிலும் மின்னணு முறையில் சேகரிக்கப்படும் நிகழ்நிலை நிலத்தடி நீர் பதிவுகள் மற்றும் சென்னைப் பெருநகரில் பெறப்படும் மழையின் அளவை பகுதி அலுவலகங்கள் மற்றும் நீர் பிடிப்புப் பகுதிகளில் உள்ள நிகழ்நிலை மழைமானிகள் இந்த LED திரையின் மூலமாக கண்காணிக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE