பிளஸ் 2 பொதுத் தேர்வு: விருதுநகர் மாவட்டத்தில் தேர்வெழுதும் 23 ஆயிரம் மாணவர்கள் - ஆட்சியர் ஆய்வு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 23,368 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 44 தேர்வுமையங்களிலும், தனித்தேர்வர்களுக்கான 2 தேர்வு மையங்களிலும் தேர்வுகள் தொடங்கின. இதேபோல், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களிலும், தனித் தேர்வர்களுக்கான ஒரு தேர்வு மையத்திலும் தேர்வு நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 12ம் வகுப்பில் 23,368 தேர்வர்களும், 11ம் வகுப்பில் 22,036 மாணவர்களும் தேர்வுகள் எழுதவுள்ளனர். மேலும், இத்தேர்வுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களாக 12ம் வகுப்பில் 105 தேர்வர்களும் மற்றும் 11ம் வகுப்பில் 102 தேர்வர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

இத்தேர்வுகளில் 104 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 104 துறை அலுவலர்களும், 1236 அறைக் கண்காணிப்பாளர்களும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சொல்வதை எழுதுபவர்களாக 110 ஆசிரியர்களும் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களையும் கண்காணிக்க பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE