மருத்துவர் பணிக்கான தேர்வை உடனே நடத்த வேண்டும் - தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு மருத்துவர் பணிக்கான தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்(எம்ஆர்பி) கடந்த ஆண்டு அக்.11-ம்தேதி வெளியிட்டது. எம்பிபிஎஸ் முடித்த ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதற்கான கணினி வழி எழுத்து தேர்வை, கடந்த நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு எம்ஆர்பி தேர்வில் ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், இன்னும் தேர்வு நடத்தப்படவில்லை.

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கப் பொதுச் செயலாளர் எம்.அகிலன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொது சுகாதாரத் துறையில் மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை உடனடியாக நடத்துமாறு எம்ஆர்பி-க்கு உத்தரவிட வேண்டும்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500 மருத்துவர்கள், 500 செவிலியர்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நேரடியாக தேர்வு செய்யுமாறு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒப்பந்த அடிப்படையிலான நியமனம் நீண்டகால நோக்கில், எவ்விதப் பயனும் அளிக்காது. மேலும், இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது, சமூகநீதி தத்துவத்துக்கு எதிரானது. எனவே, அந்த 500 மருத்துவர் இடங்களையும் சேர்த்து, மொத்தம் 1,521 இடங்களுக்கு எம்ஆர்பி தேர்வு நடத்த வேண்டும்.

சிறப்பு மருத்துவம் முடித்த அரசு சாரா மருத்துவர்களை சிறு அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நியமிப்பது பொது சுகாதாரத் துறையின் அடிப்படைக் கோட்பாட்டை சிதைக்கக்கூடியது. இந்த நியமனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அந்த இடங்களில் அரசு சாரா மருத்துவர்களை, அவர்களின் தரவரிசைக்கு ஏற்ப கலந்தாய்வு நடத்தி, பணியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE