கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள் இருந்தால் நடவடிக்கை: ஆர்டிஓ எச்சரிக்கை

By க.சக்திவேல்

கோவை: கோவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள், வெளிநபர்கள் இருப்பதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு (ஆர்டிஓ) கோவை சரக இணைப் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை சரக இணை போக்குவரத்து ஆணையரின் கட்டுபாட்டில் கோவை வடக்கு, தெற்கு, மையம், மேற்கு, பொள்ளாச்சி, மேட்டுபாளையம், திருப்பூர், தாராபுரம் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் உள்ளதாகவும், அவர்களின்றி எந்தவித பணிகளும் அங்கு நடப்பதில்லை எனவும் கோவை நுகர்வோர் மையம் சார்பில் கோவை சரக இணைப் போக்குவரத்து ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி கோவை சரக இணை போக்குவரத்து ஆணையர் சி.க.மு.சிவக்குமாரன் கோவை தெற்கு, மையம், வடக்கு, மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கையில் போக்குவரத்து துறை அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மற்றும் வெளிநபர்களை அனுமதிக்கா வண்ணம் பணியாற்றுவது தொடர்பாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த சுற்றறிக்கையில் உள்ள அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். இடைத்தரகர்கள், வெளிநபர்கள் அலுவலகங்களுக்குள் இருப்பதாக ஆய்வின்போது தெரியவந்தால், சம்மந்தப்பட்ட இருக்கை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE