அகழ் வைப்பகத்தில் தொல் பொருட்களை பார்க்க குவியும் மாணவர்கள், பொதுமக்கள்: சுற்றுலாத் தலமாக மாறிய கீழடி கிராமம்

By என்.சன்னாசி

சிவகங்கை: அகழ் வைப்பகத்தில் தொல் பொருட்களை பார்க்க மாணவர்கள், பொதுமக்கள் குவிந்து வருவதால் கீழடி கிராமம் சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் மத்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டது. பிறகு தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ந்து அடுத்த கட்ட ஆய்வு மேற்கொண்டது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடத்திய பெரிய அகழாய்வு களம் கீழடி. வைகை ஆற்றங்கரையில் உருவாகிய தமிழர் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரத்தை இவ்வகழாய்வு மூலம் அறியப்படுகிறது. 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்த நிலையில், 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை 4 கட்ட அகழாய்வுகளை நடத்தின.

இதுவரை 8 கட்ட அகழாய்வில் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. கீழடி அருங்காட்சியகம்; கீழடி அகழாய்வில் பானைகள், முதுமக்கள் தாழிகள், ஆபரண பொருட்கள் உள்பட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் பல கிடைத்துள்ளன. ஏழாம் கட்ட அகழாய்வில் அகரம் கிராமத்தில் விலங்கு உருவ பொம்மை, சுடுமண்ணால் ஆன பெண் முகம், செம்பு நாணயங்கள், புகைப்போக்கி குழாய் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி, யானை தந்தம், சங்கு ஆகியவற்றால் ஆண அணிகலன்களும் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், செங்கல் 'கட்டுமானங்கள், உறைகிணறுகள், கூரை ஓடுகள் மற்றும் அரிய தொல் பொருட்களான தங்க அணிகலன்களின் பாகங்கள், செம்பிலான பொருட்கள், இரும்பு பயன்பாட்டுப் பொருட்கள், சுடுமண்ணாலான ஆட்டக்காய்கள், விளையாட்டுச் சில்லுகள், காதணிகள், தக்களிகள், சுடுமண்ணாலான மணிகள், கண்ணாடி மணிகள், மதிப்பு குறைந்த மணிகள், பானை ஓடுவகைகளான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோம் நாட்டைச் சார்ந்த ரௌலட் பானை ஓடுகளின் சாயல் கொண்ட பானை ஓடுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இப்பொருட்களை தற்காலிகமாக மக்கள், மாணவர்கள் பார்க்கும்விதமாக மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைக்கப்பட்டன. இருப்பினும், தொல் பொருட்களை கீழடி வைத்து பாதுகாக்கவேண்டும் என, பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து கீழடி அரசு பள்ளிக்கூடம் அருகே சுமார் 2 ஏக்கர் பரப்பில் தொல்பொருள் அகழ் வைப்பகம் என்ற பெயரில் கட்டுமான பணிகள் முடிந்து, மார்ச் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆடைகளும், அணிகலனும், நிலமும், நீரும், வாழ்வு, வளமும், கடல்வழி வணிகம், கலம் செய்கோ, பொழுதுபோக்கு (விளையாட்டு) என்ற தலைப்பில் அறைகள் ஒதுக்கி, அங்கு 4 முதல் 8ம் கட்டம் வரை கண்டெடுக்கப்பட்ட சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பொருள் குறித்தும் அதற்கான ஆதாரங்களுடன் தமிழ், ஆங்கிலத்தில் புரிந்து கொள்ளும் வகையில் தகவல் எழுதி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 5ம் தேதி முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஆயிரக்கணகானோரும், விடுமுறை நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் கீழடி அருங்காட்சியகத்திற்கு வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள் அதிகமானோர் வருகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் தலைமையில் ஸ்கூல் டிரிப் என்ற பெயரில் அதிகமாக அழைத்து வருகின்றனர்.

மதுரையில் சுற்றுலா பயணிகள் பார்க்கும் இடங்களில் இதுவும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சுற்றுலா வழிகாட்டிகளும் வெளிநாட்டு பயணிகளை இங்கு அழைத்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பார்வையாளர்கள் அதிகரிக்கும் சூழலில் கீழடி கிராமம் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. தொல்லியல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ''தினமும் காலை 9 முதல் மாலை 7 மணி வரை காட்சியப்படுத்திய தொல் பொருட்களை பார்க்க அனுமதிக்கப்படுகிறது. தினமும் வருவோர் குறித்து வருகை பதிவேடு மூலம் கணக்கெடுக்கிறோம்.

சனி, ஞாயிறுகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வருகின்றனர். தற்போது அனுமதி இலவசம். விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம். இது பற்றி அரசு அறிவிக்கும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு உலகளவில் தமிழர்களின் பெருமையை உணர்த்துகிறது என்றாலும், நமது இளைய தலைமுறையினர் தமிழரின் வரலாறை தெரிந்து கொள்ள கீழடி அடையாளமாக இருக்கும்,'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE