பட்டியலின மக்கள் மீதான பாகுபாடு: ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சென்னையில் 14-ல் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: பட்டியலின மக்கள் மீதான பாகுபாடுகளை கண்டித்து சென்னையில் வரும் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுமென தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மீதான பாகுபாடுகளும், வன்கொடுமைகளும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குடிநீரில் மனிதகழிவுகளை கலப்பது, இரட்டை குவளை முறை, நில அபகரிப்பு, திருவிழாக்களில் பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு வடிவில் சமூக புறக்கணிப்புகளும், அடக்கு முறைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

சமூக நீதிக்கு புறம்பான இத்தகைய செயல்களால் சமூகத்தில் பதற்றம் அதிகரிக்கிறது. இவற்றை கண்டிக்கும் வகையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வன் கொடுமைகளுக்கு இழப்பீடு வழங்கவும், துணைக்கூறுத் திட்டங்களை அமல்படுத்தவும், பஞ்சமி நிலங்களை மீட்கவும், நிலச் சீர் திருத்த சட்டங்களை அமல்படுத்தவும் வலியுறுத்தி வரும்14-ம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இயக்கத்தின் மாநில தலைவர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்ல கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE