பாஜகவுடன் சுயமரியாதையுடன் கூட்டணி தொடரும்: மாஃபா பாண்டியராஜன் தகவல்

By செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை: பாஜகவுடன் சுயமரியாதையுடன் கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளையொட்டி அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை எனக் கூறி, அந்த சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநருடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை நீக்கி இப்பிரச்சினையில் சுமுக தீர்வு காண முதல்வர் முயற்சிக்க வேண்டும்.

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்துக்கு தமிழக அரசு அடிமை சேவகம் செய்து வருகிறது. அந்த பகுதி மக்களின் மனக்குமுறலை வெளிப்படுத்திய அதிமுக மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக முறைப்படி பொதுச்செயலாளரை தேர்வு செய்ய உள்ளோம்.

பாஜகவை நம்பிதான் திராவிட கட்சிகள் உள்ளது என்று அண்ணாமலை கூறுவது, அதிமுகவுக்கு பொருந்தாது. அதிமுக சொந்த காலில் நிற்கும் கட்சி. பழனிசாமி தலைமையில் அதிமுக ஒன்றுபட்டுவிட்டது. பாஜகவுடன் சுயமரியாதையுடன் கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE