மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற இன்றே வியூகம்: கோவை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By டி.ஜி.ரகுபதி 


கோவை: மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு இன்றே களமிறங்கி வியூகத்தை அமைத்திட வேண்டும் கோவை நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில், மாற்றுக் கட்சியினர் 4 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா, சின்னியம்பாளையத்தில் உள்ள அரங்கில் இன்று (மார்ச் 11) நடந்தது. இவ்விழாவுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அவரது முன்னிலையில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்த 4 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து முதல்வர் வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இக்கழகத்துக்கு என ஒரு வரலாறு உள்ளது. 1949-ம் ஆண்டு இக்கட்சியை தொடங்கும் போது, இக்கழகம் ஆட்சிக்காக மட்டுமல்ல, ஏழை, எளிய மக்களுக்காக என பேரறிஞர் அண்ணா எடுத்துரைத்தார். நாட்டில் இன்று எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. வரலாற்றில் இடம் பெற்றிருக்கக்கூடிய கட்சிகளும் உண்டு.

அதே நேரத்தில் திடீர் திடீரென தோன்றும் கட்சிகளையும் பார்க்கிறோம். அப்படி தோன்றும் கட்சிகளெல்லாம் தோன்றிய அடுத்தநாளே, தோன்றிய அன்றே, தோன்றுவதற்கு முன்பே, நான்தான் அடுத்த முதல்வர், நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கின்றனர். அந்த உணர்வோடு தொடங்கப்படும் கட்சிகளெல்லாம் இன்றைக்கு எந்த நிலைமைக்கு போய் இருக்கிறது, அநாதைகளாக இன்றைக்கு அவர்கள் அலைந்து கொண்டிருக்கும் காட்சிகளையும், நிலையையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆட்சி கலைப்பு: ஆனால், திமுக அப்படியல்ல. 1949-ல் தொடங்கப்பட்டாலும், மக்களிடம் ஒப்புதலைப் பெற்ற பின்னர் 1957-ஆம் ஆண்டு தேர்தலில் தான் திமுக களமிறங்கியது. 1962-ல் எதிர்க்கட்சியானது. 1967-ம் ஆண்டு திமுக பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது. ஆட்சிக்கு வந்த அண்ணா தமிழ்நாட்டு மக்களுக்குப் பல்வேறு திட்டங்களை தந்தார். அதில், சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும், இருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது ஆகிய 3 தீர்மானங்கள் முக்கியமானதாகும்.

நாமெல்லாம், தன்மானத்தோடு தமிழகத்தில் வாழ இந்த மூன்று தீர்மானங்கள் தான் காரணம். அண்ணா மறைவுக்கு பிறகு கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர், 1971 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தோம். நெருக்கடி நிலைக்கு எதிராக கருணாநிதி போராடியாதால் ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், 13 வருடங்கள் திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை.

1989-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். 1991-ல் விடுதலைப் புலிகளுக்கு உதவினோம் எனக்கூறி ஆட்சியைக் கலைத்தனர். 1996-ல், 2006-ல் ஆட்சிக்கு வந்தோம். பின்னர் 10 வருடங்கள் ஆட்சிக்கு வர முடியவில்லை. தற்போது 2021-ம் ஆண்டு 6-வது முறையாக திமுக ஆட்சி நடக்கிறது. திமுகவை போல் வெற்றிபெற்ற கட்சியும் கிடையாது. திமுக போல் தோல்வியடைந்த கட்சியும் கிடையாது.

திராவிட மாடல் ஆட்சி: தலைவர் கருணாநிதி வழியில் நடைபெறக் கூடிய திராவிட மாடல் ஆட்சி, சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிற ஆட்சியாக உள்ளது. இதனால் தான் சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளோம். இதற்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நம்பிக்கை தான் காரணம்.

வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் இதேபோன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு நீங்கள் எல்லாம் இன்றைக்கே களமிறங்க வேண்டும். அதற்குரிய வியூகத்தை அமைத்திட வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு மதத்தையும், சாதியையும் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம், குழப்பத்தை ஏற்படுத்தலாம், அதன்மூலமாக இந்த ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்றெல்லாம் கனவு கண்டு, அம்முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நம்முடைய இலக்கு என்பது மக்களவைத் தேர்தல் தான்.

கடந்த முறை மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தை இழந்தோம். வரவிருக்கக்கூடிய மக்களவைத் தேர்தலில் அந்த இடத்தையும் இழக்கக்கூடாது. புதுச்சேரியையும் சேர்த்து 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். இது ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி மட்டுமல்ல. வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான, அந்த முயற்சியில் முழுமையாக ஈடுபடப்போகிறோம், அதற்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும், துணைநிற்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், காந்தி, கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் தொ.அ.ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி, மேயர் கல்பனா, முன்னாள் எம்எல்ஏக்கள் கோவை செல்வராஜ், வி.சி.ஆறுக்குட்டி மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்