சக்குடி ஜல்லிக்கட்டு: வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சரின் காளைக்கு பரிசு வழங்கிய திமுக அமைச்சர்!

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: மதுரை சக்குடியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் யாரிமும் பிடிபடாமல் அதிமுகவின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் களமாடியது. இதற்குரிய பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தை திமுக அமைச்சர் பி.மூர்த்தி வழங்கியது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

மதுரை அருகே சக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு பேரவையின் மாநில தலைவர் பி.ராஜசேகரின் குலதெய்வமான முப்புலிசாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் மாடுபிடிவீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத், பூமிநாதன் எம்எல்ஏ உள்பட பலர் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1000 மாடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டாலும், 893 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காளையை பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆனால், அந்தக் காளை நின்று களமாடியதால் மாடுபிடி வீரர்கள் யாரும் பக்கத்தில் நெருங்கமுடியவில்லை. இதனால் காளை வென்றதாக விழாக் குழுவினர் அறிவித்தனர். இதற்குரிய பரிசுத் தொகையை காளையின் உரிமையாளரான முன்னாள் அமைச்சருக்கே திரும்ப வழங்கப்படும் என அறிவித்தனர். பின்னர் அதற்கான பரிசுத் தொகையை வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, முன்னாள் அமைச்சரின் பிரதிநிதியிடமே வழங்கினார்.

இதில் காளைகளை அடக்க முயன்றபோது 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், 15 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். போட்டியின் வென்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, பீரோ, வாஷிங்மிஷின் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE