பாஜக - அதிமுக கூட்டணியில் நாங்கள் தெளிவாக உள்ளோம்: பொன். ராதாகிருஷ்ணன்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: திமுக அரசு சரியான முறையில் நிர்வாகம் செய்யவில்லை என்றால், தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற சக்திகேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது, "2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி தமிழகத்தில் பாஜக உன்னதமான வெற்றியை பெற உழைக்க வேண்டும் என்பதற்காக இக்கூட்டம் நடைபெறுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம். உலகத்திலேயே கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் கிடையாது. அது போலத் தான் பாஜக-அதிமுகவில் உள்ளக் கருத்து வேறுபாடு.

அதிமுகவில் உள்ள பல பிரிவுகளை இணைப்பதற்கு என்ன முயற்சி செய்கிறார்கள் என எனக்குத் தெரியாது. அது அவர்களுடைய விஷயம். கருத்து வேறுபாடு காரணமாக சிலர் ஒரு கட்சியிலிருந்து வெளியேறுவது என்பது பல கட்சிகளில் நடந்துள்ளது. இதில் புதியதாக ஒன்றுமில்லை. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் போட்டியிடுவோம்.

தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டிருக்கின்றோம். அதன் பிறகு அகில இந்திய, மாநிலத் தலைமை சேர்ந்து முடிவு செய்யும். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற நாம் உழைக்க உள்ளோம்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திட்டமிட்ட கொலைகள் நடந்தேறி வருகின்றன. பள்ளி மாணவர்கள் சக மாணவர்களைக் கொலை செய்வது, ஆசிரியர்களை மாற்ற வேண்டும் என மாணவர்கள் போராட்டம் செய்வது என்ற அளவிற்குத் தமிழகம் மாறி விட்டது. இது போன்று தமிழகத்தில் இது வரை நடந்ததில்லை. திமுக சரியான முறையில் தன்னுடைய நிர்வாகத்தை செய்யவில்லை என்றால், தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும். இது குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தமிழகத்திற்கு நல்லதல்ல” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE