''மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்'' - அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தி உள்ளார்.

திருச்சி அருகே அரசு பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்த தோளூர்பட்டியைச் சேர்ந்த மவுலீஸ்வரன் என்ற மாணவர் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பாரத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த, நிகழ்வின்போது பணியில் கவனக் குறைவாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE