முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையும் அரசியல் பயணமும் ஒன்றுதான் - நடிகர் ரஜினிகாந்த்

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையும் அரசியல் பயணமும் ஒன்றுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. மநீம தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்த, முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால பயணத்தைச் சொல்லும் இந்தப் புகைப்பட கண்காட்சி நாளை (மார்.12) வரை நடைபெறுகிறது.

இந்த புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று (மார்ச் 11) நேரில் பார்வையிட்டார். கண்காட்சியில் உள்ள புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்ட ரஜினிகாந்த் முதல்வர் மிசாவில் கைதாகி சிறையில் இருக்கும் காட்சிகள் பொம்மையாக வடிவமைத்துள்ள இடம், மற்றும் சில புகைப்படங்களுக்கு மத்தியில் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, அருமையான சேகரிப்பு( Superb Collection's).. என்ன ஒரு நினைவு (what a memory) என பார்வையாளர்கள் பதிவேட்டில் பதிவு செய்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "ரொம்ப அருமையான புகைப்பட கண்காட்சி. சேகர் பாபு அழைத்து கொண்டே இருந்தார். படப்பிடிப்பில் இருந்ததால் வர இயலவில்லை. அதனால் தற்போது வந்துள்ளேன். சேகர் பாபு ரொம்ப விசுவாசமானவர்.அன்பானவர். அவருக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது.

என் இனிய நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணமும், அரசியல் பயணமும் ஒன்று தான். 54 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் இருந்தவர். கட்சியில் உழைத்து படிப்படியாக பல பதவிகளை வகித்து தற்போது முதல்வராக உள்ளார் என்று சொன்னால் அது மக்கள் அவர் உழைப்புக்கு அளித்த அங்கீகாரம். அவர், நீண்ட ஆயுள் உடன் இருந்து சேவை செய்ய வேண்டும். எனக்கும் முதல்வர் உடனான தருணங்கள் நிறைய இருக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் உடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார. அவர் கூறுகையில், "70 வருட வாழ்க்கை வரலாறு பயணத்தை இந்த கண்காட்சியின் மூலம் பார்க்க முடிந்தது. கடுமையான வாழ்க்கையை அனுபவித்திருப்பது தெரியவருகிறது. அவருடைய போராட்டங்கள் அனைத்தும் இந்த கண்காட்சியில் இருக்கிறது. நமக்கு தொடர்ந்து நல்லதை முதல்வர் முக.ஸ்டாலின் செய்து வருகிறார். மேலும் பல நல்லதை செய்ய வேண்டுமென கேட்டுகொள்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE