விருத்தாசலம் | 3,300 டன் கோதுமை இருப்பு வீணாகிறது: ரேஷன் கடைகளில் 1 கிலோ மட்டுமே விநியோகம்

By ந.முருகவேல் 


விருத்தாசலம்: கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் சுமார் 3,300 டன் கோதுமை இருப்பு இருந்தும் ரேஷன் கடைகளில் 1 கிலோ மட்டுமே விநியோகிப்பதால், இருப்பு வைக்கப்பட்டுள்ள கோதுமை மூட்டைகள் வீணாவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொது விநியோக திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை,கோதுமை மற்றும் மண்ணெண்ணை உள்ளிட்டவை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. இதுதவிர சோப்பு, டீ தூள், உப்பு போன்ற பொருட்களும் விற்பனையாளர்கள் விருப்பத்தின் பேரில் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நிலையில் 4 நபர்கள் உள்ள ஒரு குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசியும், குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கேற்ப சர்க்கரையும், மண்ணெண்ணை 1 லிட்டரும் வழங்கப்படுகிறது. இதில், கோதுமை மட்டும் அரை கிலோ தொடங்கி ஒரு கிலோ வரையில் அந்தந்த இடங்களுக்கு வழங்கல் அலுவலர்கள் கூறுவது போல வழங்கப்படுகிறது.

குடும்ப அட்டைதாரர்கள் கோதுமை கூடுதலாக கேட்டாலும், வழங்குவதில்லை. ‘கோதுமை வரத்து குறைவாக இருப்பதால், கூடுதலாக வழங்க முடியாது’ என விற்பனையாளர்கள் கூறுவதாக குடும்ப அட்டைதாரர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரோ, கடந்த 2022 மார்ச் மற்றும் மே மாதங்களில் வந்திறங்கிய கோதுமை மூட்டைகள் விநியோகிக்கபடாமல் அப்படியே மூட்டையில் தேங்கிக் கிடக்கிறது.

அவற்றில் பூச்சி உருவாகும் சூழல் உள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மிகக் குறைந்த அளவே கோதுமை தேவைக்கான பட்டியலை வழங்குவதால், கோதுமைக்கு பொதுமக்களிடமிருந்து தேவை இருந்தும், அவற்றை மாவட்ட வழங்கல் அலுவலர்கள் விநியோகிக்க முன்வருவதில்லை என்கின்றனர்.

1,152 டன் இருப்புள்ள விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் கிடங்கில் இருந்து, மார்ச் மாதத்திற்கு 96 டன் கோதுமை மட்டுமே தேவை என அம்மாவட்ட வழங்கல் அலுவலர் ஒதுக்கீடு கோரியுள்ளார். அதே நேரத்தில் அரிசிக்கு 10,260 டன்னும், சர்க்கரைக்கு 777 டன்னும் ஒதுக்கீடு கோரியுள்ளார்.

1,520 டன் இருப்புள்ள கடலூரில் 123 டன் மட்டுமே ஒதுக்கீடு கோரியுள்ளனர். 567 டன் இருப்புள்ள கள்ளக்குறிச்சியில் 103 டன் ஒதுக்கீடு கோரியுள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் அலுவலர்.

கோதுமை குறைந்த அளவு ஒதுக்கீடு கோருவதற்கான காரணம் குறித்து கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் உதயக்குமாரிடம் கேட்டபோது, “அரசு உத்தரவுக்கேற்பவே நாங்கள் ஒதுக்கீடு கோர முடியும். நாங்களாக இதில் எந்த முடிவும் எடுக்க இயலாது” என்றார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களோ, பொதுமக்களுக்கு தேவை என்பது மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு தெரியும். இந்த இருப்புக் குறித்து அவர்கள் தான் அரசிடம் எடுத்துக் கூற வேண்டும். உணவுப் பொருள் வீணாவதற்குள் அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல இவர்கள் தயங்குவதேன். தினம் தினம் அவற்றை பார்க்கும் போது, எங்களுக்கு வேதனையாக உள்ளது என்கின்றனர்.

தேவைக்கும் கூடுதலான உணவுப் பொருட்கள் எப்போதும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. அதைப் பின்பற்றியே கூடுதல் இருப்பு கோதுமை வைக்கப்படுகிறது என்று நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

அவ்வாறு கூறப்பட்டாலும் 20 கிலோ அரிசி விநியோகிக்கும் இடத்தில் 1 கிலோ கோதுமை என்பது மிகுந்த ஏற்றத்தாழ்வுடன் உள்ளது என்று நுகர்வோர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

காலச் சூழ்நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் தமிழக குடும்பங்களில் கோதுமையின் நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், இந்த 1 கிலோ விநியோகம் சரியானதா என்ற கேள்வியும் எழுகிறது. கோதுமை அரை கிலோ தொடங்கி ஒரு கிலோ வரை வழங்கப்படுகிறது. கூடுதலாக கேட்டாலும், வழங்குவதில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்