ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்ப அழுத்தம் தரப்பட்டதா? - சபாநாயகர் அப்பாவு விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் ஏதேனும் அழுத்தமாக இருக்கலாம் என்று பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினராகஈவிகேஎஸ்.இளங்கோவன் பதவியேற்ற பின், செய்தியாளர்களை அப்பாவு சந்தித்தார். அப்போது, ‘சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியுள்ளாரே?’ என்றுசெய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

கடந்த 2022-ம் ஆண்டு அக்.1-ம் தேதி தமிழக அரசால் இணையவழி சூதாட்டத்தை தடை செய்து அவசரச் சட்டம் அனுப்பப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதே ஆண்டு, அக்.19-ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்த சட்ட முன்வடிவை அவர்ஆய்வு செய்தாரா? என்பது தெரியவில்லை.

சட்ட முன்வடிவுக்கும் அவசரச்சட்டத்துக்கும் எந்த மாற்றமும்இல்லை. அதற்கு காலம் தாழ்த்தியது ஏன் என்பது தெரியவில்லை. காலம் தாழ்த்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டது. ஆளுநர் உரிமைகள் என்பதை எந்த அரசுகள், அமைச்சரவை இருக்கிறதோ அவற்றுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அவர்கள் வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று பலமுறை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 200-ல் தெளிவாகக் கூறியுள்ளதுபடி, சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது விளக்கம் கோரலாம் அல்லதுகுடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். இல்லாவிட்டால் நிலுவையில் வைக்கலாம். ஆனால், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை கொண்டுவர சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை என்று எந்த சட்டப்படி அவர்கூறினார் என்பது தெரியவில்லை.

கடந்த ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படிதான் இந்த சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்று ஆளுநர் கூறியுள்ளார். 2021-ம் ஆண்டு ஆக. 3-ம் தேதிஅந்த தீர்ப்பு வந்துள்ளது. ஆளுநர்2022-ம் ஆண்டு அக்.1-ம் தேதி அவசரச் சட்டத்துக்கு அனுமதியளித்தார்.

அதே ஆண்டில் டிச.3-ம் தேதி துணை குடியரசுத்தலைவராக வெங்கய்ய நாயுடு இருக்கும்போது, மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் மோடி தலைமையில் வைகோ, கனிமொழி என்விஎன் சோமு உள்ளிட்ட 21 பேர் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும்படி பேசியுள்ளனர்.

அப்போது குடியரசு துணைத்தலைவர், இது முக்கியமான விஷயம் என்பதால் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி விஸ்வநாத், சட்டத்துறையுடன் பேசிசரியான முடிவெடுக்க வேண்டும். இது ‘ஸ்கில் கேம் அல்ல... கில் கேம்’என்று தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக 2023 ஜனவரியில் மத்திய அரசு பொதுமக்கள் கருத்துகேட்பு நடத்தியுள்ளது.

பிப். 8-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன், கேரள நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதரன் போன்றோர் இதுகுறித்து பேசியுள்ளனர். அப்போது, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ‘இது மாநிலப் பட்டியலில் உள்ளது. சட்டம் மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்டதல்ல. அத்துடன் 17 மாநிலங்கள் புதிதாக சட்டங்கள் கொண்டு வந்துள்ளன’’ என்று கூறியுள்ளார்.

இவற்றை ஆளுநர் கவனத்தில் கொண்டிருந்தால், சட்டத்துக்கு முழுமையாக ஒப்புதல் தந்திருக்கலாம். இந்த அரசு பொறுப்பேற்ற பின்கடந்தாண்டு அக்.19-ம் தேதி சட்டப்பேரவையில் கொண்டுவரும் போது, நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அக்குழு, 10,735 பேரிடம் கருத்து கேட்டுஅதில் 10,708 பேர் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி பெறப்பட்ட பரிந்துரை அடிப்படையில் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது.

இதை ஆய்வு செய்யாமல், 2022-ம் ஆண்டு அக்.1-ம் தேதி ஒருநிலைப்பாடும், தற்போது ஒரு நிலைப்பாடும் எடுத்திருப்பது, ஆளுநர் இந்த சட்டத்துக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஆன்லைன் ரம்மி நடத்தக் கூடியவர்கள் ஆளுநரைச் சந்தித்ததாக கூறப்பட்டது. என்ன பேசினார்கள் என்பது தெரியாது.

அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தபின், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கு ஏதேனும் அழுத்தங்கள் ஆளுநருக்கு இருந்திருக்கலாம். அதனால்தான் இந்த நிலைப்பாடு எடுத்திருக்கலாம் என நினைக்கிறேன். இவ்வாறு அப்பாவு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE